புனேவை தலைமையிடமாக கொண்ட போலாரிட்டி ஸ்மார்ட் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளரின் 6 எலக்ட்ரிக் வாகனங்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரூ.40,000 ஆரம்ப விலையில் தொடங்க உள்ள இந்த பைக்குகளின் அதிகபட்ச வேகம் டாப் வேரியண்டுகளில் மணிக்கு 100 கிமீ ஆக இருக்கலாம்.
இந்தியாவில் முதன்முறையாக பெடல் அசிஸ்டென்ஸ் பெற உள்ள எலக்ட்ரிக் வாகனமாக இந்த பைக்குகள் விளங்க உள்ளது. போலாரிட்டி நிறுவனம், எக்ஸ்கூட்டிவ் மற்றும் ஸ்போர்ட் என இரு விதமாக வெளியிட உள்ளது. இதனில் எக்ஸ்கூட்டிவ் வரிசையில் E1K, E2K மற்றும் E3K எனவும் ஸ்போர்ட் பிரிவில் S1K, S2K மற்றும் S3K என மொத்தமாக ஆறு மாடல்கள் விற்பனைக்கு வரக்கூடும்.
சைக்கிளை போல பெடல் அசிஸ்ட் பெற உள்ள இந்த பைக்குகளில் 1kW முதல் 3kW வரையிலான மோட்டார்கள் பொருத்தப்பட்டு, அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் பெடல் அசிஸ்ட் உடன் 80 கிமீ ரேஞ்ச் பயணிக்க இயலும். மேலும் டாப் வேரியண்டுகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்த மாடல்களில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் வழங்கப்பட உள்ளது. பின்புறத்தில் ஒரு மோனோஷாக், முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை எதிர்பார்க்கக்கூடிய முக்கிய அம்சங்களாகும். மேலதிக விபரங்கள், செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.