வரும் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குகின்ற 2019 இந்தியா பைக் வாரத்தில் (India Bike Week – IBW 2019) கேடிஎம் 390 அட்வென்ச்சர் உட்பட 2020 கேடிஎம் டியூக், ஆர்சி வரிசை மாடல்களில் பிஎஸ்6 என்ஜின் மற்றும் ஹஸ்குவர்ணா பைக்குகள் காட்சிப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற 2019 இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சி அரங்கில் முதன்முறையாக வெளியிடப்பட்ட 390 அட்வென்ச்சர் பைக்கினை முதல் சந்தையாக இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடவும், அதேபோல கேடிஎம் 250 அட்வென்ச்சர் அறிமுகம் தொடர்பான விபரங்களுடன் காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது.
அடுத்ததாக, மேம்பட்ட 2020 கேடிஎம் 390 டியூக், 200 டியூக், ஆர்சி 390 மற்றும் ஆர்சி 200 பைக்குகளில் பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்கள் இந்தியன் பைக் வாரத்தில் காட்சிப்படுத்தப்பட்டு நுட்ப விபரங்கள் மற்றும் வருகை குறித்தான அனைத்து தகவலும் வெளியாக உள்ளது.
மிக நீண்ட காலமாக இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஹஸ்குவர்னா பைக்குகளில் விட்பிலன் 401, ஸ்வார்ட்பிலன் 401 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல்கள் பிஎஸ்6 என்ஜின் பெற்றதாக ஜனவரி 2020 முதல் விநியோகிக்க உள்ளது. டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரு தேதிகளில் இந்தியா பைக் வீக் நடைபெற உள்ளது.