இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட மாடல்களை ஒரே சமயத்தில் உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹீரோ மற்றும் எரிக் புயல் ரேசிங் இணைந்து ஆரம்பத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்கான கான்செப்ட்களை உருவாக்கியது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இபிஆர் நிறுவனம் திவாலானது. எனவே, தனது சொந்த முயற்சியில் மின்சாரத்தில் இயங்கும் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரிப்பில் தீவரமாக களமிறங்கியுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், ஜெய்பூரில் அமைந்துள்ள Centre Of Innovation & Technology எனப்படுகின்ற தலைமை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையத்தின் மூலம் மின்சாரத்தில் இயங்கும் பல்வேறு பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் ஒரே சமயத்தில் உருவாக்கி வருகின்றது.
நிதி அயோக் பரிந்துரையின்படி மத்திய அரசு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 150சிசி க்கு குறைவான பெட்ரோல் பைக்குகளை முற்றிலும் நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, இந்தியாவின் முன்னணி மோட்டார் தயாரிப்பாளர்கள் ஹீரோ, பஜாஜ் அர்பனைட், ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது மின் வாகன தயாரிப்பு பணியை தொடங்கியுள்ளன.
வரும் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில், முதன்முறையாக தனது மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் பல்வேறு நவீன நுட்பங்களை பெற்று விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தில் ஹீரோ முதலீடு செய்துள்ளதால், இந்நிறுவனத்தின் நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது.