பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளில் பிஎஸ் 6 என்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முந்தைய மாடலை விட கூடுதலாக விலை ரூ.14,000 வரை உயர்த்தப்படலாம்.
தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற மாடலின் அடிப்படையிலே பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பிஎஸ்4 350சிசி என்ஜினில் கார்புரேட்டர் பயன்படுத்தப்பட்ட நிலையில், இனி எஃப்ஐ பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் பெற்றுள்ளதால் பவர் சற்று குறைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.
பாரத் ஸ்டேஜ் 6 என்ஜினை பெற உள்ள கிளாசிக் 350 பைக்கில் புதிய பாடி ஸ்டிக்கரிங், கூடுதலாக ஸ்டெல்த் பிளாக் மற்றும் க்ரோம் எடிசன் என இரு நிறங்களையும் கிளாசிக் 350 பைக்கிலும் வரவுள்ளது. இதுதவிர, பெட்ரோல் கலனில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில மெக்கானிக்கல் மேம்பாடுகள் வழங்கப்பட்டு ஃபைனல் டிரைவ் இடம் மாற்றப்பட்டு , அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. மேலும் பைக்கின் இருக்கை அமைப்பில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிஎஸ் 4 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலை விட ரூ.14,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளது. எனவே, கிளாசிக் 350 மாடல் ரூ.1.58 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் வரக்கூடும். மேலும், முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.