இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மேம்பட்ட புதிய இன்ஜின் பெற்ற ஹோண்டா ஃபோர்ஸா 350 மேக்ஸி ஸ்கூட்டர் வெளியிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய சந்தையில் பிக் விங் டீலர்கள் மூலம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
முந்தைய ஃபோர்ஸா 300 மாடலில் இருந்த 279சிசி இன்ஜினுக்கு மாற்றாக கூடுதல் திறன் பெற்ற 330 சிசி இன்ஜின், பல்வேறு டிசைன் மாற்றங்கள், நவீனத்துவமான வசதிகளை கொண்டதாக வெளியாகியுள்ளது.
புதிய 330சிசி esp இன்ஜின் அதிகபட்சமாக 29.2PS பவரை 7500rpm-ல் மற்றும் 31.5Nm டார்க் 5250rpm-ல் வெளிப்படுத்துகின்றது. முந்தைய மாடலை விட 4.2 என்எம் டார்க் கூடுதலாக வெளிப்படுத்துகின்றது. புதிய ஹோண்டா ஃபோர்ஸா 350 வேகம் மணிக்கு 137 கிமீ ஆகும்.
தோற்ற அமைப்பில் பல்வேறு ஸ்டைலிங் அம்சங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டு, முன்புற வைசர் 180 மிமீ வரை உயர்த்த முடியும். ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்கில் உள்ளதை போன்ற ஹோண்டா செலக்டெபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்மார்ட்போன் வாய்ஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை இணைத்துள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ், 780 மிமீ இருக்கை உயரம் கொண்ட இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள இருக்கைக்கு அடியிலான ஸ்டோரேஜ் பகுதியில் இரண்டு ஹெல்மெட் வைக்க இயலும்.
இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியல் புதிய ஃபோர்ஸா 350 ஸ்கூட்டரை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்நிறுவனம் ஹோண்டா ஃபோர்ஸா 125, ஃபோர்ஸா 750 போன்ற மாடல்களை வெளியிட்டுள்ளது.
web title : 2021 Honda Forza 350 unveiled – Tamil Bike News