ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்6 விதிகளுக்கு 2020 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மாடல் ரூ.59,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டீலக்ஸ் மற்றும் ஸ்டாண்டர்டு என இரு வேரியண்டுகளில் கிடைக்கின்றது.
ஹோண்டாவின் eSP HET (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
புதிய வசதிகளுடன் ஃபயூவல் இன்ஜெக்ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும் 5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 10 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ் 4 மாடலை விட 7.90 hp பவரை மற்றும் 9 என்எம் டார்க் வெளிப்படுத்தியது.
புதிய ஹோண்டா டியோ புதிய டிசைனை பெறுவதுடன் எல்இடி ரன்னிங் விளக்கு, நவீன டெயில் விளக்கு டிசைன், இரு பிரிவு கிராப் ரெயில், கூர்மையான லோகோ மற்றும் புதிய பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ளது. முழு டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் பொருத்தப்பட்டு எரிபொருள் இருப்பினை கொண்டு கணக்கிடும் தூரம், சராசரி எரிபொருள் மைலேஜ் மற்றும் நிகழ்நேர எரிபொருள் மைலேஜ் ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த கன்சோலில் பயணம் தொலைவு, கடிகாரம் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் போன்ற பிற விவரங்களையும் வழங்குகிறது.
டியோ பிஎஸ் 4 மாடலில் 10 அங்குல வீல் பெற்றிருந்த நிலையில் தற்போது பெரிய 12 அங்குல வீல் பயன்படுத்துகிறது. மேலும் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பாஸ் லைட் சுவிட்ச் மற்றும் வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி போன்றவற்றை பெற்றுள்ளது. ஹோண்டா டியோவின் உள்ள வீல்பேஸ் 22 மி.மீ வரை அதிகரித்துள்ளது.
2020 ஹோண்டா டியோ பிஎஸ் 6 மாடல் ஸ்டாண்டர்ட் மற்றும் டீலக்ஸ் என இரு வேரியண்டில் கிடைக்கிறது. ஹோண்டா டியோ ஸ்டாண்டர்ட் வேரியண்டின் விலை ரூ.59,990 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) மற்றும் நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது – மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், கேண்டி ஜாஸி ப்ளூ, ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் வைப்ராண்ட் ஆரஞ்சு பெற்றிருக்கின்றது. ஹோண்டா டியோ டீலக்ஸ் வேரியண்டின் விலை ரூ. 63,340 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. மேட் சாங்ரியா ரெட் மெட்டாலிக், டாஸ்ல் மஞ்சள் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் நிறங்களில் உள்ளது.