டிவிஎஸ் மோட்டார்சின் பிரசத்தி பெற்ற அப்பாச்சி 180 பைக் விற்பனை எண்ணிக்கை 30 லட்சம் கடந்துள்ள நிலையில், கூடுதல் வசதிகள் மற்றும் புதிய பொலிவை பெற்ற 2019 டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 பைக் ரூ. 84,578 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான மாற்றங்களை பெற்றுள்ள புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் ரேஸ் பைக்குகளை போன்ற சிவப்பு மற்றும் வெள்ளை கலவையிலான புதிய பாடி கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளன. புதிய அமைபிலான ஹேண்டில்பார், கிராஷ் கார்டு மற்றும் சட்டத்தில் இணைக்கப்பட்ட ஃப்ரேம் ஸ்லைடர்கள், ஃபோர்ஜ்டு ஹேண்டில்பார் வெயிட் மற்றும் அல்கான்ட்ரா மாதிரியிலான இருக்கை அமைப்பை பெற்று விளங்குகின்றது.
குறிப்பாக இந்த மாடலில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் புதுப்பிக்கப்பட்டு வெள்ளை வண்ணத்திலான பேக்லிட்டுடன் கூடிய புதிய டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல், அப்பாச்சி 180 பைக்கில் 177.4சிசி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 16 bhp பவரையும், 15.5 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக அப்பாச்சி 180 பைக் மணிக்கு 114 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டு விளங்குகின்றது.
இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், கூடுதலாக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட வேரியண்டும் விற்பனை செய்யப்படுகின்றது.
பியர்ல் வெள்ளை, க்ளாஸ் கருப்பு, T கிரே, மேட் நீலம் மற்றும் மேட் சிவப்பு ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கின்ற அப்பாச்சி 180 பைக் தொடக்க விலை ரூ. 84,578 மற்றும் ஏபிஎஸ் பிரேக் பெற்ற மாடல் ரூ. 95,392 (விற்பனையக விலை) ஆகும்.