2019 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ கண்காட்சி அரங்கில் எலெக்ட்ரிக் மாடலாக ஃபோர்டு மஸ்டாங் மாச்-இ நவம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு செல்ல உள்ள மாச்-இ இந்தியாவிலும் விற்பனைக்கு வெளி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அறிமுகத்திற்கு முன்பாக இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியான தகவலை முன்னணி jalopnik ஆட்டோமொபைல் தளம் வெளியிட்டுள்ளது. தற்பொழுது இந்த இணைய பக்கம் செயல்பாட்டில் இல்லாத நிலையில் குறிப்பாக டாப் மஸ்டாங் மாச் இ ஜிடி அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 300 மைல் அல்லது 482 கிமீ ரேஞ்சு வழங்க வல்லதாக விளங்கும் என தெரிய வந்துள்ளது. வழக்கமான மஸ்டாங் ஐசி என்ஜின் காரை போலவே தோற்ற அமைப்பினை பெற்றிருந்தாலும் முன்புற கிரில் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு பெரும்பாலான எலெக்டரிக் வாகனங்களின் கிரிலை போன்றே அமைந்துள்ளது.
இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை, நீட் அன்ட் கிளீன் டிசைனை பெற்றுள்ள மஸ்டாங் மாச் இ காரில் மிக அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் மற்றும் சீனாவில் வெளியாக உள்ள மஸ்டாங் எலக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள மஸ்டாங் மாச் இ பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.