இந்தியர்களின் மிக விருப்பமான காராக உருவெடுத்துள்ள ரெனோ க்விட் கார் கடந்த ஒரு வருடத்துக்குள் 1,65,000 முன்பதிவுகளை அள்ளி விரைவில் 1,00,000 டெலிவரிகளை தொட்டு புதிய சாதனை க்விட் கார் படைக்க உள்ளது.
க்விட் விற்பனைக்கு வந்த 10 மாதங்களில் 75,000 கார்களுக்கு மேல் டெலிவரி கொடுக்கப்பட்டு 1.65 லட்சம் முன்பதிவுகளை பெற்று தொடக்கநிலை கார் சந்தையில் மிக குறுகிய காலத்தில் 15 சதவீத சந்தை மதிப்பினை பெற்றுள்ளது.
எல்லோரும் கொண்டாடும் வகையிலான அட்டகாசமான வடிவமைப்புடன் நேர்த்தியான கார் மாடலாக விளங்கும் ரெனோ க்விட் காரில் 800சிசி எஞ்ஜின் மற்றும் 1லி எஞ்சின் என இரு ஆப்ஷன்களில் மிகுந்த சவாலினை ஏற்படுத்தியுள்ளது. முதல் தலைமுறை கார் வாங்குபவர்களின் கனவு காராக விளங்கி வந்த மாருதி சுசூகி ஆல்ட்டோ காருக்கு நேரடியான போட்டியாளராக சிம்ம சொப்பனமாக விளங்கும் வகையில் அமைந்த எஸ்யூவி க்ராஸ்ஓவர் தாத்பரியங்களை பெற்ற க்விட் வெற்றி மேல் வெற்றியை பெற்றுள்ளது.
க்விட் காருக்கு தேவைப்படும் பொருட்களை 98 சதவீதம் உள்நாட்டிலே தயாரிக்கப்படுவதனால் மிகுந்த சவாலான தொடக்க விலையில் அமைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய க்விட் வெற்றியை தனதாக்கி கொண்டது. மேலும் கூடுதலாக நேற்று வெளியிடப்பட்டுள்ள ரெனோ க்விட் 1லி SCe எஞ்சின் மாடல் சாதரன 800சிசி மாடலை விட வெறும் ரூ.22,000 மட்டுமே எக்ஸ்ஷோரூம் விலையில் கூடுதலாக அமைந்து 800சிசி மாடலை விட 13 bhp ஆற்றல் மற்றும் 19 Nm டார்க் வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த மாடலாக அமைந்துள்ளது.
க்விட் காரில் போற்றப்படும் மற்றொரு முக்கிய அம்சம் காரில் உள்ள இடவசதியாகும். போட்டியாளர்களை விட கூடுதலான இடவசதியை பெற்று 300 லிட்டர் பூட்ஸ்பேஸ் , இருக்கைகளுக்கான இடைவெளி போன்றவை சிறப்பாக பெற்றுள்ளது.
சிறப்பு வசதிகளாக கருதப்படும் 7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய மீடியா நேவிகேஷன் அமைப்பு , பூளூடூத் , யூஎஸ்பி ,ஆக்ஸ் ஆதரவுகள் , இந்திய சாலைக்கு ஏற்ற வகையிலான 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவை குறிப்படதக்க அம்சமாகும்.
ரெனோ க்விட் காருடன் போட்டியிடும் கார்கள் மாருதி சுசூகி ஆல்ட்டோ , ஹூண்டாய் இயான் , நானோ , டியாகோ , கோ கார்களாகும். மேலும் வருகின்ற பண்டிகை காலத்தில் வெளியிடப்பட உள்ள ரெனோ க்விட் ஏஎம்டி மாடல் கூடுதல் கவனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரெனோ-நிசான் கூட்டணியில் உருவான CMF-A தளத்தில் வடிவமைக்கப்பட்ட ரெனோ க்விட் கார் மிக பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இதே பிளாட்பாரத்தில் வருடத்திற்கு ஒரு கார் என 4 முதல் 5 விதமான கார் பாடி ஸ்டைலை கொண்டவற்றை உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.