சமீபத்தில் கவாஸாகி இந்தியா வெளியிட்டுள்ள டீசர் மூலம் அனேகமாக இந்தியாவில் தயாரித்து கவாஸாகி வெளியிட உள்ள முதல் பொது சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ஆஃப் ரோடு மாடலான KLX 230 S ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஆஃப் ரோடு ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் வரவுள்ள KLX 230 S பைக்கில் 233cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 19.7bhp மற்றும் 20.3Nm வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த பைக்கில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றாலும், அதே நேரத்தில் ஆன்ரோடு அனுபவத்திற்கும் ஏற்றதாக விளங்கும் என கூறப்படுகின்றது.
இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதனால் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கும். இந்த மாடலை பற்றிய முழு விபரம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகலாம். மேலும் ஒரு சில டீலர்களிடம் தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
ஏற்கனவே இந்தியாவில் கவாஸாகி KX, KLX என இரு பிரிவுகளில் மூடப்பட்ட ஆஃப் ரோடு இடங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையிலான 10 மாடல்களில் விற்பனை செய்து வருகின்றது.