பஜாஜ் ஆட்டோவின் மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்ற 2024 பல்சர் என்எஸ்200 (Bajaj Pulsar NS200) டீலர்களுக்கு வர துவங்கியுள்ளதால் அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ளதால் முக்கிய விபரங்களை தொகுத்து அளித்துள்ளேன்.
என்ஜின் மற்றும் அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றும் ஏற்படுத்தாமல் கூடுதலாக சில மதிப்புக்கூட்டப்பட்ட வசதிகளை பெறுகின்ற இந்த நேக்டு ஸ்டைல் பல்சரில் 199.5சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 24 bhp மற்றும் 18.74 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இந்த பைக்கில் உள்ள 6 வேக கியர்பாக்ஸ் இலகுவாக கியரை மாற்ற ஏதுவாக அமைந்திருக்கின்றது.
குறிப்பிடத்தக்க பல்சர் என்எஸ்200 மாற்றங்கள் பின்வருமாறு;-
- புதிய எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் பிரீடேட்டர் ஸ்டைலை பெற்று அதிகப்படியான வெளிச்சத்தை இரவு நேர ரைடர்களுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
- சமீபகாலத்தில் டிஜிட்டல் சார்ந்த வசதிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதனால் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்றது.
- டிஜிட்டல் கிளஸ்ட்டரை ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது மொபைல் சிகனல், பேட்டரி இருப்பு, கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகளும் உள்ளன.
- மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கொடுப்பதனால் வழி தெரியாத இடங்களிலும் இலகுவாக பயணிக்க உதவும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசதிகளை பல்சர் என்எஸ்160 மாடலும் பெறுகின்றது. இந்த இரு என்என்ஸ் மாடலும் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்துடன் புதுப்பிக்கப்பட்ட சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மாற்றஙுகளை கொண்டிருக்கின்றது.
தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலின் அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் 100/80 – 17 டயர் முன்பக்கத்தில், பின்புறத்தில் 130/70 – 17 டயரை பெற்று ட்யூப்லெஸ் ஆக அமைந்துள்ளது. இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் பெற்று பல்சரின் NS200 மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) உள்ளது.
விற்பனையில் கிடைத்த மாடலை விட 2024 பல்சர் NS200 மோட்டார்சைக்கிள் விலை ரூ.5000 வரை உயர்த்தப்படலாம் எனவே ரூ.1.54 லட்சத்தை எட்டக்கூடும் என எதிர்பார்க்கின்றோம். இந்த பைக்கிற்கு போட்டியாக அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, எக்ஸ்ட்ரீம் 200 ஆகியவை உள்ளன. மேலும் பல்சர் என்எஸ்160 பைக்கும் டீலர்களுக்கு வந்துள்ளது.
பட உதவி – Youtube.com/thesameervlogs