பஜாஜ் ஆட்டோ தனது மாடல்களுக்கு ரைட் கனெக்ட் ஆப் வசதியை வழங்கி வரும் நிலையில் பல்சர் NS160 பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிய எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கன்சோல் கொண்டதாக வந்துள்ளது. மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லை.
புதிதாக இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கன்சோல் மூலம் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது ஸ்மார்ட்போனின் மொபைல் சிக்னல், எஸ்எம்எஸ் அலர்ட், அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதியை பல்சர் என்எஸ்160 பைக் பெறுகின்றது.
இந்த கன்சோலில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சராசரி மைலேஜ், ரைடிங்கை பொறுத்து தற்பொழுது மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் உள்ளிட்ட விவரங்களுடன் எவ்வளவு தொலைவு செல்ல பெட்ரோல் இருப்பு ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கப்பட்ட எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் மேம்பட்டதாகவும் அதிகப்படியான வெளிச்சத்தை இரவு நேரங்களில் தருவதற்கு ஏற்ற வகையில் பல்சர் NS200 பைக்கை தொடர்ந்து இந்த பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்சர் என்எஸ் 160 பைக் மாடலில் 160.3cc ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் 4 வால்வு பெற்று 9,000 rpm-ல் அதிகபட்சமாக 17.03 bhp பவர் மற்றும் 7,250 rpm-ல் டார்க் 14.6 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலிலும் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கிற்கு போட்டியாக அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி உள்ளிட்ட மாடல்கள் இந்திய சந்தையில் கிடைக்கின்றது. புதிய பஜாஜ் பல்சர் NS160 விலை ரூ.3000 முதல் ரூ.6000 வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் E85 ஃபிளெக்ஸ் ஃப்யூவல் ஆதரவை பெற்ற NS160 காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், பல்சர் என்150 மற்றும் பல்சர் என்160 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.