ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரே காலண்டில் ஒட்டுமொத்தமாக 2,50,000க்கும் கூடுதலாக வாகனங்களை விற்பனை செய்துள்ள நிலையில், 5,500 கோடி ரூபாய் நிதி திரட்ட முதல் பொதுப்பங்கு வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
வரும் மார்ச் 2024 செயல்பாட்டுக்கு வரவுள்ள ஓலா ஜிகா ஃபேக்டரி நிறுவனம் இந்திய அரசின் ரூ.18,100 கோடி உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திற்காக ஓலா எலக்ட்ரிக் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிறுவனம் 20 GWh திறன் கொண்ட ஆலையை ஏற்படுத்த உள்ளது.
Ola Electric
இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர வாகனத் தயாரிப்பாளராக விளங்கும் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் என பதிவு செய்யப்பட்டு செக்யூரிட்டிஸ் அண்ட் எக்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) மூலம் முதல் பொதுப்பங்கு வெளியிட (ஐபிஓ) வரைவை தாக்கல் செய்துள்ளது.
இந்த ஐபிஓ மூலம் இந்நிறுவனம் ரூ.5,500 கோடி மதிப்புள்ள பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது, அதே நேரத்தில் ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் உட்பட அதன் தற்போதைய முதலீட்டாளர்கள் 95,191,195 பங்குகளை விற்பனை செய்வார்கள். தற்பொழுது பவிஷ் அகர்வால் மற்றும் சாஃப்ட்பேங்க் முக்கிய முதலீட்டாளராக உள்ளனர்.
திரட்டப்படுகின்ற நிதி மூலம் நிகர வருமானத்தில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.1,226.43 கோடியை அதன் தமிழ்நாட்டில் அமைகின்ற ஜிகா தொழிற்சாலையில் செல் உற்பத்தி திறனை விரிவாக்கவும், ரூ.1,600 கோடியை ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கும், ரூ.800 கோடி கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன சந்தையில் 30 சதவிகித சந்தைப் பங்களிப்பை பெற்றுள்ள இந்நிறுவனம் 2022-2023 நிதியாண்டில் மொத்தம் 1,56,261 மின்சார இரு சக்கர வாகனங்களை விற்றிருந்த நிலையில் 2023 காலண்டர் ஆண்டில் 253,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளது.
இந்நிறுவனம் மார்ச் 2024ல் 1.4 GWH திறனுடன் முதற்கட்ட செல் உற்பத்தியை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் உள்ள புதிய ஜிகா தொழிற்சாலையின் செயல்பாடுகளைத் தொடங்கி அக்டோபர் மாதத்திற்குள் 5 GWH ஆக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.