எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பிற்கு முன்னிரிமை வழங்கும் தமிழ்நாடு அரசு அடுத்து, கார்பன் உமிழ்வை குறைக்கின்ற பசுமை ஹைட்ரஜன் மையமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், பயன்பாட்டில் உள்ள மையங்களின் உற்பத்தி திறனை 50 முதல் 75 % உயர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
TN Green Hydrogen Hub
சென்னையில் ஆட்டோகார் புரபெஷனல் இதழ் நடத்திய இந்தியா இவி மாநாட்டில் பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசுகையில், பசுமை ஹைட்ரஜன் மையத்தை உருவாக்கும் பணியில் தீவரமாக ஈடுபட்டுள்ளோம். எங்களிடம் வலுவான மின்சார வாகனம் சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்படுத்த, புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருப்பதில் இருந்து விடுபட்டு பசுமை எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்கவைகளுக்கு மாறுவது அனைவருக்கும் பயனளிக்கும்” என்று அமைச்சர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், கிருஷ்ணகிரியில் ஓலா, டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஏதெர், ராணிப்பேட்டை ஆம்பியர் எலக்ட்ரிக், காஞ்சிபுரத்தில் BYD இந்தியா, திருவள்ளூரில் உள்ள ஸ்டெல்லண்டிஸ் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள E ராய்ஸ் மோட்டார்ஸ் போன்ற முன்னணி எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இத்தகைய வாகனங்களை பெரிய அளவில் உற்பத்தி செய்ய உதவுகின்றன என்றார்.
“எங்கள் மாநிலம், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, கொள்கை உந்துதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சிக்கான தெளிவான பார்வையைக் கொண்டுள்ளது. எதிர்காலத்திற்கான EV கொள்கையைக் கொண்ட சில மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது” என்று ராஜா கூறினார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது மின்சார வாகனத் துறை மிகப்பெரிய பார்வையைப் பெறும் என்று ராஜா மேலும் கூறினார்.
பசுமை ஹைட்ரஜன் என்றால் மாசு உமிழ்வு அல்லாத புதுப்பிக்கவல்ல எரியாற்றலைப் பயன்படுத்தி, தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர் வழியாக மின்சாரம் கடத்தப்படும்போது ஹைட்ரஜன் உற்பத்தியாகிறது.அதனால்தான் கார்பன் வாய்வினை குறைக்க உதவுவதால் பசுமை ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இந்திய சந்தையில் வரவிருக்கும் மிகப்பெரிய சரக்கு டிரக்குகள், நெடுந்தொலைவு பயணிக்கின்ற பேருந்துகள், கார்கள் ஆகியற்றில் முக்கிய எரிபொருளாக ஹைட்ரஜன் விளங்க உள்ளது.