ஹோண்டா நிறுவனம் 350-500சிசி சந்தையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சவால் விடுக்கும் சிபி350 பைக்கில் புதிதாக சில மாற்றங்களை கொண்டு வந்து விலை குறைந்த வேரியண்டை ரெட்ரோ தோற்றத்தில் அறிமுகம் செய்துள்ளது.
2023 ஹோண்டா CB350 vs ஹைனெஸ் CB350 பைக்குகளுக்கு இடையிலான முக்கிய வித்தியாசங்களை தற்பொழுது ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
Honda CB350 vs H’ness CB350
இரண்டு ஹோண்டா பைக்குகளும் பொதுவாக பல்வேறு மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்றது. முதலில் 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 21 பவர் மற்றும் 3000 RPM-ல் 30 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
சிபி 350 மற்றும் ஹைனெஸ் சிபி 350 என இரண்டு மாடல்களுக்கும் இடையில் நிறங்கள் வித்தியாசப்படுகின்றது. மேலும் மிக முக்கியமாக இரண்டு மாடல்களும் வித்தியாசப்படுகின்ற மற்றவை பின்வருமாறு. வட்டமான எல்இடி ஹெட்லைட், நீட்டிக்கப்பட்ட மெட்டல் ஃபெண்டர்கள், முன் ஃபோர்க் குழாய்களுக்கான மெட்டாலிக் கவர்கள், ஓவல் வடிவ எரிபொருள் டேங்க், பிளவுபட்ட இருக்கை மற்றும் தனித்துவமான எக்ஸாஸ்ட் டிசைன் ஆகியவற்றில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஹைனெஸ் சிபி 350 டேங்க், முன்புறத்தில் ஃபோர்க்குகளுக்கு கில்டர் ரப்பர் கவர், பெட்ரோல் டேங்கில் மாற்றம், எக்ஸ்ஹாஸ்ட் மாற்றங்கள் உள்ளன.
DLX Pro வேரியண்டில் கிளஸ்ட்டரில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி அழைப்புகள், மியூசிக், நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் டிரிப் மீட்டர், ரியல் டைம் மைலேஜ் அறியும் வசதி, சராசரி மைலேஜ், எரிபொருள் இருப்பினை அறியும் வசதி, கியர் பொசிஷன் இன்டிகேட்டர், பேட்டரி வோல்ட் மீட்டர் ஆகியவற்றை கொடுத்துள்ளது.
ஹோண்டா சிபி 350 விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.2.18 லட்சம் வரையிலும், ஹைனெஸ் சிபி350 மாடல் விலை ரூ.2.10 லட்சம் முதல் ரூ.2.17 லட்சம் வரை கிடைக்கின்றது. இந்நிறுவனத்தின் மற்றொரு மாடலான சிபி 350 ஆர்எஸ் விலை ரூ. 2.15 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரை கிடைக்கின்றது.
கூடுதலாக புதிதாக வந்துள்ள பைக்கிலும் சோலோ கேரியர் கஸ்டம் மற்றும் கம்ஃபோர்ட் கஸ்டம் என இரு கஸ்டமைஸ் ஆப்ஷன் உள்ளது.
(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை)
ஹோண்டா சிபி350 போட்டியாளர்கள்
இந்த மாற்றங்கள் மூலம் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 போலவே ஹோண்டா சிபி 350 அமைந்துள்ளது. ஆனால் ஹோண்டாவிடம் யாரும் நேரடியாக கிளாசிக் 350 மாடலை போலவே வடிவமைக்கும் என எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்பதே உண்மை ஆகும்.
தோராயமாக ஹோண்டா சிபி350 பைக்குகள் 3,000 வரையிலான மாதந்திர விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. இந்த எண்ணிக்கை உயருமா என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கின்றோம்.
ஏற்கனவே, 350-500சிசி சந்தையில் நுழைந்து விட்ட ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440, டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400எக்ஸ் போன்றவற்றையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுதவிர, ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, கிளாசிக் 350, ஜாவா 42, ஜாவா கிளாசிக் மற்றும் யெஸ்டி போன்ற பைக்குகளும் உள்ளன.