இந்தியாவில் நடைபெறுகின்ற சாலை விபத்துகளில் ஒரு மணி நேரத்துக்கு 19 உயிரிழப்புகள் நிகழ்வதாக 2022 சாலை விபத்து தொடர்பான அறிக்கை வெளியான நிலையில், ADAS பாதுகாப்பு அம்சத்தை கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களில் அடிப்படை வசதியாக இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்திய சாலைகளில் நடக்கின்ற விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்களில் பெரும்பாலானவை பின்புறத்தில் இருந்து மோதுவது, இடித்து விட்டு செல்லுதல் மற்றும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளது.
ADAS Mandatory for New vehicles
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட நான்கு சக்கர வாகனங்களின் வகைகளில் ‘மூவிங் ஆஃப் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்’ (MOIS – Moving Off Information System) என்ற பெயரில் பாதுகாப்பு அம்சத்தை நிறுவும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய சாலை பயனாளர்களை பாதுகாக்கும் நோக்கில், குறிப்பாக குறைந்த வேகத்தில் செல்லும் பொழுது ஏற்படும் விபத்துகளின் அபாயத்தைத் குறைப்பதே MOIS திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
மேலும் படிக்க – இந்தியாவில் தினமும் 456 பேர் விபத்தில் உயிரிழப்பு
பொதுவாக வாகன ஓட்டிகளுக்கு உதவுகின்ற நவீன தொழில்நுட்பம் (ADAS) என அழைக்கப்படுகின்ற பாதுகாப்பு அம்சத்தில் பிளைண்ட் ஸ்பாட் அம்சத்தை போல அரசு பரிந்துரைத்துள்ள MOIS உள்ளது.
பிளைண்ட் ஸ்பாட் என்றால் வாகனம் சார்ந்த சென்சார் பொருத்தப்பட்டு, ஓட்டுநரின் கண்களுக்கு புலப்படாத நிலையில் பக்கத்திலும் பின்புறத்திலும் உள்ள பிற வாகனங்களைக் கண்டறிந்து எச்சரிக்கை முறை ஆகும். தற்பொழுது உள்ள நவீன வாகனங்களில் எச்சரிக்கையுடன் தானியங்கி முறையில் பிரேக்கினை இயக்கி பாதுகாப்பினை வழங்குகின்றது.
புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களும் குறைந்தபட்சம் லெவல் 1 ADAS பாதுகாப்பு தொகுப்பினை கட்டாயம் பொருத்த வேண்டியிருக்கலாம். இதன் மூலம் வாகனங்களில் விலை உயரக்கூடும்.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகின்ற புதிய பிரீமியம் கார்களில் ADAS நுட்பம் வழங்கப்பட்டு வருகின்றது.