ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய கரீஸ்மா XMR 210 பைக்கிற்கு முதற்கட்ட முன்பதிவில் 13,688 எண்ணிக்கையை கடந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி நவம்பர் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் உற்பத்தி துவங்கப்பட்ட நிலையில், அறிமுக சலுகை விலை முடிவுக்கு வந்த நிலையில் ரூ.7,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு தற்பொழுது ரூ.1.80 லட்சம் ஆக உள்ளது. முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Karizma XMR 210
கரீஸ்மா XMR 210 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.
கரீஸ்மா மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டு 17 அங்குல வீல் பொருத்தப்பட்டிக்கின்றது. முழுமையாக ஸ்போர்ட்டிவ் எல்இடி ஹெலைட் பெற்றதாகவும், டெயில் லைட் எல்இடி ஆக அமைந்திருக்கின்றது.
ஹீரோ மோட்டோகார்ப் தலைமை வணிக அதிகாரி ரஞ்சிவ்ஜித் சிங் கூறுகையில், “கரீஸ்மா XMRக்கு கிடைத்த அபாரமான வரவேற்பினை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதிக எண்ணிக்கையிலான முன்பதிவுகள், எங்கள் வாடிக்கையாளர்கள் காட்டிய நம்பிக்கை மற்றும் உற்சாகத்தைப் பறைசாற்றுகிறது என குறிப்பிட்டுள்ளார். தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள முன்பதிவு அடுத்த சில வாரங்களில் துவங்க உள்ளது.