ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் 2023 ரேஞ்சு ரோவர் வேலார் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு ரூ.93 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் HSE வேரியண்டின் அடிப்படையில் வந்துள்ள மாடலுக்கு முன்பதிவு நடைபெறும் நிலையில் செப்டம்பர் மாதம் விநியோகம் செய்யப்பட உள்ளது.
முந்தைய மாடலை விட ரூ.3.29 லட்சம் வரை வேலர் விலை உயர்த்தப்பட்டு, இந்தியாவில் கிடைக்கின்ற மற்ற போட்டியாளர்களான ஜாகுவார் F பேஸ் மற்றும் போர்ஷே மாச்சன் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
2023 Range Rover Velar
விற்பனைக்கு வந்துள்ள புதிய வேலார் ஃபேஸ்லிஃப்ட் காரில் 250hp, 365Nm, 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பவர்டிரெய்ன் அதிகபட்சமாக 217Km/hr வேகத்தைக் கொண்டுள்ளது மற்றும் 0-100கிமீ வேகத்தை 7.5 வினாடிகளில் எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
204hp, 430Nm, 2.0-லிட்டர் டீசல் என்ஜின் – லேசான ஹைபிரிட் பெற்று 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் டீசல் பவர்டிரெய்ன் 8.3 வினாடிகளில் 0-100கிமீ வேகத்தில் 210km/h வேகத்தில் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
வேலார் ஃபேஸ்லிஃப்ட் 580 மிமீ நீர் உள்ள இடங்களிலும் பயணிக்கும் திறனை கொண்டுள்ளது. இது ‘எலிகன்ட் அரைவல்’ பயன்முறையைக் கொண்ட ஏர் சஸ்பென்ஷனுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது எஸ்யூவி காரில் நுழையும் போது அல்லது வெளியேறும் போது உயரத்தை 40 மிமீ குறைக்கிறது.
ரேஞ்சு ரோவர் காரில் அகலமான புதிய பெரிய கிரில், மாற்றியமைக்கப்பட்ட எல்இடி ரன்னிங் விளக்குடன் பிக்சல் எல்இடி ஹெட்லைட், அகலமான காற்று துவாரங்கள் மற்றும் ரேஞ்ச் ரோவர் பிராண்டிங் கொண்டுள்ள பானெட் பெற்றுள்ளது. மேலும், காரின் பின்புறத்தில் சுறா-துடுப்பு ஆண்டெனா, சாய்வான விண்ட்ஸ்கிரீன், டெயில்லேம்ப் மற்றும் புதிய பம்பர் ஆகியவை அடங்கும்.
காரின் இண்டிரியரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் இணக்கமான புதிய 11.4-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை லேண்ட் ரோவர் Pivi Pro பெறுகின்றது.
2023 ரேஞ்சு ரோவர் வேலார் எஸ்யூவி காரின் HSE பெட்ரோல் மற்றும் HSE டீசல் விலை ரூ.93 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.