இந்திய சந்தையில் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்ற அனைத்து வாகனங்களும் ARAI அல்லது ICAT மூலம் சான்றியளிக்கப்படுகின்றது. அந்த வகையில் IDC மற்றும் MIDC என எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற ரேஞ்சு எவ்வாறு கணக்கிடப்படும் என்பதனை அறிந்து கொள்ளலாம்.
IDC என்றால் இந்திய ஓட்டுநர் சைக்கிள் (Indian Driving Cycle) என குறிப்பிடப்படுகிறது. மேலும் இதன் மாற்றியமைக்கப்பட்ட இந்திய ஒட்டுநர் சைக்கிள் (Modified Indian Driving Cycle ) தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.
IDC & MIDC என்றால் என்ன ?
இந்தியாவில் நடைமுறையில் உள்ள மின்சார வாகனங்களுக்கான ரேஞ்சு அறிகின்ற சோதனை முறையான IDC மற்றும் MIDC வாயிலாக வாகனத்தினை ஒரு டைனமோமீட்டர் மூலம் இயக்கி அறிந்து கொள்ளலாம்.
IC என்ஜின் மைலேஜ் அல்லது EV ரேஞ்சு அறிய வாகனங்களை உண்மையான சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி சோதனை செய்ய மாட்டார்கள். அதற்கு மாற்றாக சாலை போல செயல்படுகின்ற டைனமோமீட்டர் மூலம் சோதனை ஆய்வகத்தில் மாறுபட்ட வெப்பநிலை, வாகனத்தின் சுமை மற்றும் மாறுபட்ட சாலைகள் போன்று நிஜமானதாக உருவகப்படுத்தி சோதனை செய்யப்படுகின்றது. மற்றபடி, நிஜ சாலைகளில் சோதனை செய்யப்படாது.
சாலைகளில் ஓட்டுவதனை போன்று வேகம் மாறுபாடுகள் இல்லாமல், தொடர்ந்து நிலையான வேகம், குறைந்த வேகம் ஆகியவற்றை கொண்டு மட்டும் சோதிக்கப்படும். எனவே, வாகனத்தின் ரேஞ்சு அதிகமாகவே இருக்கும்.
IDC மற்றும் MIDC சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள ரேஞ்சு ஆனது உண்மையில் நிஜ சாலையில் ஓட்டும் பொழுது கொடுக்கப்பட்டுள்ள வரம்பை விட மிக குறைவாகவே கிடைக்கும். அதேபோல ஒவ்வொருவரின் ஓட்டுதல் மாறுபாட்டிற்கு ஏற்ப ரேஞ்சு அல்லது மைலேஜ் மாறுபடும்.
குறிப்பாக, இந்திய சந்தையில் கிடைக்கின்ற எலக்ட்ரிக் கார்களில் பிரபலமான நெக்ஸான் கார் MIDC மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ் ரேஞ்சு 453 கிமீ ஆகும். ஆனால் உண்மையில் சாலையில் கிடைப்பது அதிகபட்சமாகவே 320 கிமீ – 350 கிமீ வரை மட்டுமே.
அடுத்து, பிரசத்தி பெற்ற ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ARAI IDC ரேஞ்சு 146 கிமீ ஆகும். நிகழ்நேரத்தில் ஓட்டும் பொழுது 95 கிமீ முதல் 100 கிமீ வரையிலான ரேஞ்சு வழங்குகின்றது.
இரண்டு பேட்டரி மின்சார வாகனங்கள் எடுத்துக்காட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுவாக ரேஞ்சு என்பது நிறுவனங்கள் சான்றிதழ் மூலம் பெற்ற ரேஞ்சில் 70 % பெறுவதற்கு மட்டுமே வாய்ப்புகள் உள்ளது.