இந்திய சந்தையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அடுத்த மாடலாக எம்பிவி ரக பிரிவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படும் காரின் படம் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளது.
இந்நிறுவனம் சொனெட், செல்டோஸ் மற்றும் கார்னிவல் என மூன்று மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில், 6 மற்றும் 7 இருக்கைகளை கொண்ட எம்பிவி ரக மாடலை சோதனை செய்து வருகின்றது. குறிப்பாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற எர்டிகா, எக்ஸ்எல்6, மராஸ்ஸோ போன்ற கார்களை நேரடியாக எதிர்கொள்ளுகின்ற வகையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்த காரில் இடம்பெற உள்ள என்ஜின் அனேகமாக சொனெட் காரில் உள்ளதை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ள நிலையில், முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில் சோதனை ஓட்டத்தில் உள்ள காரில் டூயல் டோன் அலாய் வீல், உயரமான வீல் ஆர்ச், பானெட் மற்றும் முன்புற அமைப்பில் எஸ்யூவி போன்ற தோற்ற அமைப்பினை பெற்றதாக அமைந்துள்ளது. மேற்கூறையில் எலக்ட்ரிக் சன் ரூஃப் இடம்பெற்றுள்ளது.
வரும் 2022 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்ற கியா எம்பிவி காரின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்திற்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.