கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, ஏற்றுமதி சந்தைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த புனே ஆலையை முழுமையாக மூடியுள்ளது.
இந்தியாவில் ஆரம்ப காலகட்டங்களில் சிறப்பான வரவேற்பினை பெற்றிருந்த செவர்லே பிராண்டு பிறகு படிப்படியாக சந்தை மதிப்பை இழந்தது. இந்நிலையில், தனது விற்பனையை இந்தியாவில் நிறுத்திக் கொண்டது. இந்நிறுவனத்திற்கு குஜராத் மாநிலம் ஹலால் பகுதியில் ஒரு ஆலை மற்றும் புனே தாலேகேன் பகுதியில் ஒரு ஆலையும் இருக்கின்றது. இந்திய சந்தையில் வெளியேறிய பின்னர் இந்நிறுவனத்தின் சீன கூட்டணி நிறுவனமான எஸ்.ஏ.ஐ.சி குழுமத்தின் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் நுழைந்த பின்னர், ஜிஎம் குஜராத் ஆலையை கையகப்படுத்தியது.
இந்நிலையில் ஏற்றுமதி சந்தைக்காக தொடர்ந்து புனே அருகே அமைந்துள்ள ஆலை செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஜிஎம் தொழிற்சாலையை முழுமையாக மூடியுள்ளது.
கிரேட் வால் மோட்டார்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் புனே ஆலையை இந்திய சந்தைக்கு வரவிருக்கின்ற கிரேட் வால் மோட்டார்ஸ் கையகப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம், சீன பொருட்களை புறக்கணிக்கும் நோக்கம் ஆகியவற்றின் காரணமாக சீனாவின் GWM நிறுவனத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
மத்திய அரசு அனுமதி வழங்கினால், 2021 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் சீன நிறுவனம் கிரேட் வால் மோட்டார்ஸ் களிமிறங்கினால் நிச்சயமாக ஜிஎம் ஆலையை கையகப்படுத்தும்.