4 மீட்டருக்கு குறைந்த நீளத்தைப் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக வரவுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி ஜூலை 16 ஆம் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விற்பனைக்கு அனேகமாக நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வெளியாகும்.
ஜப்பானிலிருந்து சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த எஸ்யூவி மாடல் ரெனோ-நிசான் கூட்டணியின் CMF-A பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை கொண்டு பல்வேறு புதிய வசதிகளுடன் பட்ஜெட் விலையில் நடுத்தர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் கைகெர் காம்பேக்ட் எஸ்யூவி மாடலும் நிசான் நிறுவன புதிய எஸ்யூவி மாடலும் பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில் நிசான் கிக்ஸ் காரில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லைட் மற்றும் எல் வடிவ ரனிங் விளக்குகள் டட்சன் ரெடி-கோ காரில் உள்ளதை போன்றும் அதன் முகப்பு கிரிலும் டட்சன் கிரிலுக்கு இணையாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேக்னைட் மற்றும் கைகெர் எஸ்யூவி மாடலில் 95 hp பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலகளில் ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி 300, நெக்ஸான், ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவுள்ள கியா சோனெட் எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ளும் திறனுடன் மற்ற மாடல்களை விட விலை குறைவாக அமைந்திருக்கும். எனவே, நிசானின் மேக்னைட் வரும் 2021 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு ரூ.5.50 லட்சத்திற்குள் துவங்கலாம். அதே நேரத்தில் ரெனால்ட் கைகெர் விலை ரூ. 5.50 லட்சத்திற்கு கூடுதலாக அமைந்திருக்கலாம்.