சீனாவை தலைமையிடமாக கொண்ட கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் $ 1 பில்லியன் (ரூ.7,604) முதலீட்டை மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் மேற்கொள்ள உள்ளதை உறுதி செய்துள்ளது.
கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வைகப்பட்டிருந்த கிரேட் வால் மோட்டார் நிறுவனத்தின் ஹவால் பிராண்ட் மற்றும் ஜி.டபிள்யூ.எம் எலக்ட்ரிக் வாகனங்களை 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மஹாராஷ்ட்டிரா மாநில அரசுடன் மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் நேரடியாக 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் குஜராத் ஆலையை சீனாவின் எம்ஜி மோட்டார் கையகப்படுத்தியதை போல, புனே அருகே அமைந்துள்ள ஜிஎம் தலாகேன் ஆலையை கிரேட் வால் மோட்டார்ஸ் கையகப்படுத்தி பல்வேறு நவீன மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 1,30,000 வாகனங்களை தயாரிக்கும் திறனுடன் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கிரேட் வால் மோட்டார் நிறுவனம், Wey, Haval, Ora எலக்ட்ரிக் கார் மற்றும் ஜி.டபிள்யூ.எம் பிக்கப் டிரக் என மொத்தம் நான்கு பிராண்டுகளை கொண்டுள்ளது. வே மற்றும் ஹவால் எஸ்யூவி கார்களை விற்பனை செய்யும் நிலையில், இந்திய சந்தைக்கு ஹவால் எஸ்யூவி மற்றும் GWM எலக்ட்ரிக் கார் பிராண்டை கொண்டு வரவுள்ளது.
கிரேட் வால் மோட்டாரின் ஹவல் எஸ்யூவி மற்றும் எலக்ட்ரிக் கார்கள் அடுத்த ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம்.