விற்பனையில் உள்ள D400 அடிப்படையில் புதிய பஜாஜ் டாமினார் 250 பைக் மாடலை ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 400சிசி மாடலை விட ரூ.30,000 விலை குறைவாக அமைந்துள்ளது.
கேடிஎம் 250 டியூக் பைக்கில் இடம்பெற்றுள்ள அதே 250 சிசி என்ஜின் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு சற்று குறைவான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்துக்கின்றது. 248.8 சிசி, திரவத்தினால் குளிரூட்டும் முறை பெற்ற ஒரு சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 27hp பவரை 8,500rpm-லும் 23.5Nm டார்க்கினை 6,500rpm-ல் வெளிப்படுத்துகின்றது.
இரு பைக்குகளும் தோற்ற அமைப்பில் ஒன்றை போலவே இருந்தாலும், சிறிய அளவிலான டயரை பெற்றுள்ளது. டாமினார் 250-ல் முன்புறத்தில் 100/80 – 17 மற்றும் பின்புறத்தில் 130/70 – 17 டயரை கொண்டுள்ளது. ஆனால் டாமினார் 400 பைக்கினை விட குறைந்த ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் டிஸ்க் பிரேக்கினை முன்புறத்தில் இந்த புதிய மாடல் கொண்டுள்ளது.
250சிசி மாடலில் முன்புறத்தில் 43 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்கு வழங்கப்பட்டு, பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது. முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற டயரில் 230 மிமீ கொண்டதாகவும், டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டாமினாரின் டி250 மாடலில் சிவப்பு மற்றும் பிளாக் வைன் என இரு நிறங்களை பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்களிடமும் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விரைவில் டெலிவரி வழங்கப்பட உள்ளது.