முந்தைய மாடலை விட மேம்பட்டதாக வந்துள்ள புதிய மாருதி இக்னிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பிஎஸ்6 என்ஜின் பெற்ற மாடலுக்கு முன்பதிவு நெக்ஸா வாயிலாக துவங்கப்பட்டுள்ளது.
வெளிவந்துள்ள இக்னிஸ் காரின் தோற்றத்தில் புதிய கிரில் வடிவமைப்பையும், புதிய முன் மற்றும் பின்புற பம்பர் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. பம்பர்கள் இருபக்கமும் ஸ்கஃப் பெற்றிருக்கின்றது. மற்றபடி ஸ்டைலிங் அம்சங்களை பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. புதிதாக லூசண்ட் ஆரஞ்சு மற்றும் டர்க்கைஸ் ப்ளூ நிறங்களை கொண்டுள்ளது. மூன்று புதிய டூயல் டோன் நிறங்களாக கருப்பு நிறத்துடன் நெக்ஸா ப்ளூ, கருப்பு நிறத்துடன் லூசண்ட் ஆரஞ்சு மற்றும் சில்வர் நிறத்துடன் நெக்ஸா ப்ளூ ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
இன்டிரியரை பொறுத்தவரை டாஷ்போர்டின் அமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. ஆனால் 7.0 அங்குல தொடுதிரை இப்போது மாருதியின் சமீபத்திய ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைப் பெற்றுள்ளது. இது நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் கமென்ட் வசதிகளை வழங்குகின்றது.
என்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை, புதுப்பிக்கப்பட்ட மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பிஎஸ் 6 உடன் வரவுள்ளது. இந்த என்ஜின் தற்போது ஸ்விஃப்ட் மற்றும் பலேனோவில் காணப்படுகிறது. ஸ்விஃப்ட்டில் இடம் பெற்றுள்ள, 1.2-லிட்டர், நான்கு சிலிண்டர் எஞ்சின் 83 ஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும். ஆனால் பிஎஸ் 6 முறைக்கு மாற்றும்போது, பவரில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன் கியர்பாக்ஸ் விருப்பங்களை பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி தானியங்கி கியருடன் வழங்கப்படும்.