ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் அடுத்த ஸ்கூட்டர் மாடலாக 450 எக்ஸ் விற்பனைக்கு வெளியாக உள்ளது. விற்பனையில் உள்ள ஏதெர் 450 மாடலை விட கூடுதலான பவர் மற்றும் ரேஞ்சை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர் மாடலாக 450x விளங்க உள்ளது.
தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற ஏதெர் 450 ஸ்கூட்டர் பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் கிடைத்து வருகின்றது. அடுத்த சில மாதங்களில் இந்நிறுவனம் டெல்லி, மும்பை புனே மற்றும் ஹைத்திராபாத் உள்ளிட்ட முன்னணி நகரங்கள் மற்றும் நாடு முழுவதும் விரைவில் விரிவுப்படுத்த உள்ளது. இந்தியாவின் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற மின் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஏதெர் விளங்க துவங்கியுள்ளது.
ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 PS) பவர், 20.5 NM வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.
2.4 kWh லித்தியம் இயான் பேட்டரி 50,000 கிலோ மீட்டர் வரை உழைக்கும் திறனை கொண்டதாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி பேக் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமாக IP67 எனப்படும், தூசு மற்றும் நீரினால் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பேட்டரி விளங்கும்.
இந்த மாடலை விட கூடுதலான பவர் மற்றும் டார்க் வழங்கும் வகையில் ஏதெர் 450 எக்ஸ் விளங்க உள்ளது. அதிகபட்ச ரேஞ்சு 100 – 150 கிமீ ஆக அமையலாம். விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சேட்டக் ஸ்கூட்டரை விட அதிகப்படியான வசதிகள் மற்றும் ரேஞ்சை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் முதல் டீசரை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஏதெர் 450x எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவை இந்நிறுவனத்தின் இணையதளத்தில் துவங்கியுள்ளது. எனவே, ஜனவரி 2020 இறுதி அல்லது பிப்ரவரி தொடக்க வாரங்களில் விற்பனைக்கு வரக்கூடும்.