வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா பைக் வீக்கில் (IBW 2019) வெளியிடப்பட உள்ள கேடிஎம் நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் பைக்கில் இடம்பெற உள்ள முக்கியமான அம்சங்கள் மற்றும் சிறப்புகளை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.
டிசைன் & ஸ்டைல்
விற்பனையில் கிடைத்து வருகின்ற 790 அட்வென்ச்சர் மாடலின் தோற்ற வடிவமைப்பினை நேரடி உந்துதலாக கொண்டு கேடிஎம் 390 அட்வென்ச்சர் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மிகவும் ஸ்டைலிஷான இரு பிரிவுகளை கொண்ட எல்இடி ஹெட்லைட், மிக நேர்த்தியான கட்டமைப்பினை வெளிப்படுத்தும் 14.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் கலன், வழக்கமான கேடிஎம் நிறுவன ஆரஞ்சு நிற கலவை கொண்டிருக்கின்றது. ஆன் ரோடு மற்றும் ஆஃப் ரோடு என இரு சாலைகளிலும் பயணிக்கும் வகையிலான டயரை கொண்டதாக அமைந்துள்ளது.
என்ஜின்
390 டியூக் பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜின் யூரோ 5 / பிஎஸ் 6 இணக்கமான என்ஜின் பொருத்தப்பட்டு 9,500 ஆர்பிஎம் சுழற்சியில் 43 பிஎஸ் அதிகபட்ச சக்தியையும், 7,250 ஆர்பிஎம் சுழற்சியில் 37 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாகும். 6 வேக டிரான்ஸ்மிஷன் பெற உள்ளது.
வசதிகள்
ட்ரெயின் பயணத்திற்கு ஏற்ப 170 மிமீ பயணிக்கும் தன்மையுடன் வடிமைக்கப்பட்ட இன்வெர்டேட் முன்புற ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை இரண்டுமே WP நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல பின்புற அலாய் மற்றும் வீல்களை கொண்டுள்ளது. ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பயணத்துக்கு ஏற்ப டயரினை கொண்டுள்ளது.. பிரேக்குகளில் ரேடியல் காலிபருடன் கூடிய 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் ஆகியவை பெற்று சுவிட்சுபிள் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கினை கொண்டிருக்கும்.
டிஜிட்டல் முறையிலான கிளஸ்ட்டரை கொண்டதாக வந்துள்ள 390 அட்வென்ச்சர் பைக்கில் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்
இந்திய அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், கவாஸாகி வெர்சிஸ் X-300 மற்றும் பிஎம்டபிள்யூ 310 GS போன்ற மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
விலை
இந்தியாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடல் ரூ. 3 லட்சத்தில் விற்பனைக்கு டிசம்பர் 6-7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்தியா பைக் வீக் அரங்கில் விற்பனைக்கு வெளியாகலாம். இதுதவிர இந்நிறுவனம் கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் மாடலும் காட்சிப்படுத்தப்படலாம்.