எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யூவி காராக வரவுள்ள எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விற்பனைக்கு ஜனவரி முதல் வெளியிடப்பட உள்ளது. மின்சார எஸ்யூவி காரின் விலை ரூ.22 லட்சத்தில் துவங்கலாம்.
ஆண்டுக்கு 2,000 முதல் 3,000 வரையிலான மின்சார இசட்எஸ் கார்களை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில் அறிமுக சலுகையாக முதற்கட்ட விற்பனையில் வாங்குவோருக்கு இலவச ஃபாஸ்ட் சார்ஜரை வழங்க உள்ளதாக சமீபத்தில் ஆட்டோகார் இதழுக்கு இந்நிறுவன ராஜீவ் சாபா தலைவர் அளித்த பேட்டியில் தெரிய வந்துள்ளது.
ZS EV மாடலில் பொருத்தப்பட்டுள்ள 44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், NEDC சான்றிதழ் படி அதிகபட்சமாக 262 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். இந்த பேட்டரியை 7kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.
இந்நிறுவனத்தின் முதல் ஹெக்டர் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள இணைய சார்ந்த பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்ற எம்ஜி ஐஸ்மார்ட் நுட்பத்தையும் இசட்எஸ் மின்சார காரும் பெற உள்ளது. முதற்கட்டமாக இந்த கார் டெல்லி, மும்பை, அகமதாபாத், ஹைத்திராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் வெளியாக உள்ளது.