இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிசான் நிறுவனத்தின் டட்சன் பிராண்டு மீண்டும் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது. 89 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்ட இந்த பிராண்டின் இரண்டாவது அத்தியாமும் முடிவுக்கு வரவுள்ளது. முன்னாள் நிசான் தலைவராக இருந்த கார்லஸ் கோசன் 2013 ஆம் ஆண்டில் இந்தியா, இந்தோனேசியா, ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அறிமுகம் செய்த குறைந்த விலை பிராண்டு டட்சனை தனது செலவை குறைக்கும் நோக்கில் நிசான் கைவிட உள்ளது.
அறிமுகத்தின் போது இந்தியா, இந்தோனேசியா என பல்வேறு சந்தைகளில் முதற்கட்ட வரவேற்பினை பெற்றாலும், தொடர்ந்து தனது விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யாமல் கோ, கோ+ போன்ற கார்கள் பின்னடைவை சந்தித்தன. இந்நிலையில், இந்தியா உட்பட விற்பனையில் உள்ள அனைத்து நாடுகளிலும் டட்சன் பிராண்டு கார்களின் ஆயுட்காலம் முடியும்வரை மட்டும் கிடைக்கும். அதன்பிறகு திட்டமிடப்பட்டுள்ள அனைத்து மாடல்களும் இனி நிசான் பிராண்டில் விற்பனைக்கு கிடைக்கும் என கருத்தப்படுகின்றது.
டட்சன் மட்டுமல்ல சர்வதேச அளவில் மிக குறைந்த வரவேற்பினை பெற்ற கார்கள் மற்றும் பிக்கப் டிரக்குகளை படிப்படியாக சந்தையிலிருந்து நீக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளது. தனது ஆலைகளில் குறைந்தபட்ச ஆதரவு பெற்ற அனைத்து லைன்களையும் முடிவுக்கு கொண்டு வரவுள்ளது. ஆனால், எந்தவொரு தொழிற்சாலையின் செயல்பாட்டையும் முழுமையாக நிறுத்திக் கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனம் இந்தியா உட்பட 14 நாடுகளில் உள்ள ஆலைகளில் சுமார் 12,500க்கு மேற்பட்ட ஊழியர்களை நீக்கியது இங்கே குறிப்பிடதக்கதாகும். குறிப்பாக நிசான் நிறுவனம் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற சந்தைகளில் அதிகம் கவனம் செலுத்த உள்ளது.
உடனடியாக நிசான் இந்தியா நிறுவனம், டட்சன் பிராண்டை கைவிடப்போவதில்லை, படிப்படியாக கோ கார்களின் ஆயுட்காலம் வரை விற்பனையை தொடர உள்ளது. அதேவேளை, டட்சன் ரெடி-கோ மாடலின் ஃபேஸ்லிஃப்ட் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. அனேகமாக மேம்பட்ட ரெடி-கோ நிசான் பிராண்டில் வெளியாக வாய்ப்புள்ளது.
வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் ரெனோ HBC காம்பாக்ட் எஸ்யூவி வெளியாக உள்ளது. இதே மாடலின் அடிப்படையிலான 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி காரை பல்வேறு பிரீமியம் வசதிகளுடன் நிசான் வெளியிட உள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் டட்சன் பிராண்டு முழுமையாக நீக்கப்படலாம்.