இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன கண்காட்சியை முதன்மையான டூ வீலர் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் உட்பட ராயல் என்ஃபீல்ட், டிவிஎஸ், பஜாஜ, டொயோட்டா , ஃபோர்ட் மற்றும் ஜீப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சி வரும் பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் ஆட்டோ எக்ஸ்போ உதிரி பாகங்கள் 2020 கண்காட்சி பிப்ரவரி 6 முதல் 9 ஆம் தேதி வரை புது டெல்லியில் உள்ள பிரகதி மெய்டனில் நடைபெற உள்ளது.
உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை ஏற்ற இறக்கம் நிறைந்த காலத்தில் பயணித்து வருகின்றது. விற்பனை இன்னும் மந்தமாகவே உள்ளது. இந்த சூழ்நிலை சவாலாக இருந்தபோதிலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எதிர்கால மாசு உமிழ்வு நடைமுறைக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றது. ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள விதிகளுக்கு முன்னதாக புதிய உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதே நேரத்தில், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலனுக்காக வணிக நோக்கங்களை பூர்த்தி செய்வதில் எங்கள் வளங்களுக்கு முன்னுரிமை அளிப்பதே விவேகமானதாக கருதுகிறோம்.
எங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்ட குறிக்கோள்களுக்கு இணங்க, வரவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவைத் தவிர்க்க, நாங்கள் மிகவும் விவாதித்த பின்னர் முடிவு செய்துள்ளோம் என வெளியிட்டுள்ளது.
மேலும் ஃபோர்டு இந்தியா, ராயல் என்ஃபீல்ட், பஜாஜ் ஆட்டோ ( முறையே இரு நிறுவனங்களும் கடந்த முறையும் பங்கேற்கவில்லை), டிவிஎஸ், டொயோட்டா மற்றும் ஜீப் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்க வாய்ப்பில்லை.
2020 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுசுகி, டாடா, மஹிந்திரா, ஹூண்டாய், கியா, எம்ஜி மோட்டார்ஸ், வோக்ஸ்வேகன் குழுமம், மெர்சிடிஸ்-பென்ஸ், சிட்ரோயன் மற்றும் ரெனால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. மேலும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் பங்கேற்கலாம்.