குர்கானைச் சேர்ந்த ரிசலா எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எவோலெட் மின்சார ஸ்கூட்டர் பெயரில் போலோ, போலோ போனி, டெர்பி என்ற மூன்று குறைந்த விலை ஸ்கூட்டர் உட்பட எலக்ட்ரிக் குவாட் மோட்டார்சைக்கிளாக வாரியர், ஃபால்கான், ரேப்டார் மற்றும் ஹவாக் என மொத்தமாக 6 விதமான எலக்ட்ரிக் வாகனங்களை காட்சிப்படுத்தியுள்ளது.
ஆரம்ப கட்டத்தில், இந்நிறுவனம் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி, ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா சந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் நாடு தழுவிய அளவில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. 1,00,000 சதுர அடியில் பரவியிருக்கும் ஹரியானாவின் பிலாஸ்பூரில் உள்ள ஆலையில் மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளது.
இந்நிறுவனம் முதற்கட்டமாக போலோ, போலோ போனி, மற்றும் டெர்பி என மூன்று விதமான மாடல்களில் நான்கு வேரியண்டுகள் வெளியிட்டுள்ளது. மூன்று மாடல்களும் அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் பயணிக்க இயலும், மூன்று மாடல்களுக்கும் டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. இந்த ஸ்கூட்டர்களில் 250 வாட் BLDC மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
போலோ இ ஸ்கூட்டரில் இரண்டு வகைகள் உள்ளன – அவை போலோ EZ (48V / 24Ah லெட் ஆசிட் பேட்டரி) மற்றும் கிளாசிக் (48V / 24Ah லித்தியம் அயன் பேட்டரி), முறையே ரூ. 44,499 மற்றும் ரூ. 54,499 ஆகும்.
டெர்பி மாடலில் ப்ரூஸ்லெஸ் டிசி மின்சார மோட்டார் உள்ளது, இது இரண்டு வகைகளில் வருகிறது – EZ (60V / 30Ah லெட் ஆசிட் பேட்டரி) மற்றும் கிளாசிக் (60V / 30Ah லித்தியம் அயன் பேட்டரி), முறையே ரூ .46,499 மற்றும் ரூ. 59,999 ஆகும்.
மூன்றாவது இ ஸ்கூட்டர் போலோ போனி இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது – EZ (48V / 24Ah லெட் ஆசிட் பேட்டரி) மற்றும் கிளாசிக் (48V / 24Ah லித்தியம் அயன் பேட்டரி), முறையே ரூ .39,499 மற்றும் ரூ .49,499 ஆகும்.
இந்தியாவில் முதன்முறையாக எலக்ட்ரிக் குவாட் பைக்கினை இந்நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. எவோலெட் வாரியர் 3 கிலோவாட் பவர் பெற்று அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், ரிவர்ஸ் கியரில் வேகம் 20 கிமீ ஆகவும், முழுமையான சிங்கிள் சார்ஜில் 50 கிமீ பயணத்தை வழங்கும் வாரியர் எலக்ட்ரிக் குவாட் பைக்கில் 72 V / 40 AH லித்தியம் அயன் பேட்டரியுடன் கிடைக்கிறது, இதன் விலை ரூ .1.4 லட்சம் ஆகும்.
அடுத்ததாக இந்நிறுவனம் ஃபால்கன் எலக்ட்ரிக் பைக் மாடலை வெளிப்படுத்தியிருந்தது. இது தற்போது ரிவோல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சூப்பர் சாக்கோ சீன மாடலை அடிப்படையாக கொண்டதாகும். அடுத்து எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரை ரேப்டார் என்ற பெயரில் வெளியிட உள்ளது.