முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு பிஎஸ்6 என்ஜின் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, கிளாசிக் 500 பைக்குகள் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியாகியுள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு விற்பனைக்கு வரவுள்ளது.
பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்ட என்ஜின் மற்றும் முற்றிலும் மேம்பட்ட அம்சங்களை பெற்றதாக வரவுள்ள கிளாசிக் பைக்கின் உளவு படங்கள் வாயிலாக பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது.
புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350
முன்பாக வெளிவந்திருந்த படங்கள் மூலம், தற்போதைய மாடல் போல அல்லாமல், டிஸ்க் பிரேக் இடதுபுறத்திற்குப் பதிலாக, வலது புறத்தில் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் டிரைவ் செயின் இடதுபுறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக இந்த முறை கிக் ஸ்டார்ட் லிவரை என்ஃபீல்டு நீக்கியுள்ளது.
இதுதவிர கால் வைக்கின்ற ஃபுட் பெக் , பிரேக் லிவர், சைலென்ஸர் போன்றவற்றில் இறிய மாற்றங்கள் தென்படுகின்றது. தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள பெரும்பாலான தோற்றம் சார்ந்த பேனல்கள் மற்றும் டிசைன்கள் விற்பனையில் உள்ள மாடலில் உள்ளதை போன்றே அமைந்திருந்தாலும், விற்பனைக்கு வரும் போது பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கும் என் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிஎஸ் 6 மாசு உமிழ்வு என்ஜின் பெற உள்ளதால் 350சிசி மாடலில் கார்புரேட்டர் கைவிடப்பட்டு FI அம்சத்தை உள்ளடக்கியதாக வரவுள்ளது. ஆனால் என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் மாற்றங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. அடுத்தப்படியாக என்ஜின் தோற்றத்தில் குறிப்பாக வலது புறத்தில் உள்ள கியர்பாக்ஸ் கேசிங் ஆனது இன்டர்செப்டார் 650 மாடலில் உள்ளதை போன்ற அமைப்பினை கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக என்ஃபீல்டு கிளாசிக் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக தொடர் விலையேற்றம், காப்பீடு கட்டண உயர்வு உட்பட ஜாவா மோட்டார்சைக்கிள் வருகை போன்றவை முக்கிய காரணமாக காணப்படுகின்றது. அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் வெளிவரவுள்ள புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றதாக வெளியாகக்கூடும்.
படங்கள் உதவி -rushlane