பிரசத்தி பெற்ற அமெரிக்கா மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர் ஹார்லி டேவிட்சன், ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளை குறிவைத்து சீனாவின் கியான்ஜியாங் நிறுவனத்துடன் இணைந்து 338சிசி என்ஜின் பெற்ற மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அடுத்த ஆண்டின் இறுதியில் வெளியிட உள்ளது.
நடுத்தர மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதன்மையான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் சவாலினை ஏற்படுத்த ஹார்லி-டேவிட்சன் நிறுவனம், இந்த மாடலை சீனா மற்றும் இந்தியா உட்பட ஆசியாவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு வருகின்றது. இந்தியாவில் கியான்ஜியாங் நிறுவனம் பெனெல்லி மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகின்றது.
ஹார்லி டேவிட்சன் 338சிசி பைக்
கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் விற்பனை சரிவினை சந்தித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம் தனது சந்தையை வலுப்படுவதற்கு என குறைந்த இடப்பெயர்வினை கொண்ட பைக் மாடலை ஆசியாவில் விற்பனைக்கு வெளியிட முடிவெடுத்துள்ளது.
சீனாவில் முதற்கட்டமாக விற்பனைக்கு 2020 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் வெளியிடப்பட உள்ள 338சிசி என்ஜின் பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல் ஹார்லியின் பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். குறிப்பாக இந்த மோட்டார்சைக்கிளை கியான்ஜியாங் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது. எனவே விலை மிகவும் சவாலாக அமைந்திருக்கும்.
ஹார்லி 338சிசி என்ஜின் மாடல் தொடர்பாக வெளியிட்டுள்ள மாதிரி படத்தில் மிகவும் ஸ்டைலிஷான வட்ட வடிவ எல்இடி விளக்குகள், என்ஜின் தொடர்பில் இரு சிலிண்டர் கொண்டதாகவும், இரண்டு புகைப்போக்கி மற்றும் குறைவான பாடி வெர்க் கொண்டதாக காட்சியை வழங்குகின்றது.
சீனாவை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. 2027 ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விற்பனை எண்ணிக்கை 50 சதவிகிதம் உயர்த்தவும் ஹார்லி திட்டமிட்டுள்ளது. பெனெல்லி நிறுவனத்தின் மாடல்களை தனது வசம் கியான்ஜியாங் கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.