கவர்ச்சிகரமான தோற்ற பொலிவினை வெளிப்படுத்துகின்ற கியா செல்டாஸ் எஸ்யூவி காரினை முதல் மாடலாக கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ் 6 என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு வரவுள்ளது.
பெட்ரோல் , டர்போசார்ஜ்டு பெட்ரோல் என இரண்டு பெட்ரோல், ஒரு டீசல் என மொத்தமாக மூன்று என்ஜின் மற்றும் மூன்று கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில் மிக சிறப்பான பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய கியா UVO கனெக்ட்டிவிட்டி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
கியா செல்டாஸ் எஸ்யூவி சிறப்புகள்
சர்வதேச அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள புதிய கியா செல்டாஸ் எஸ்யூவி மாடலில் மிக நேர்த்தியான தோற்றத்தை வழங்கும் வகையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த காரின் தோற்ற அமைப்பு இளைய தலைமுறையினரை கவரும் அம்சங்களை கொண்டுள்ளது.
முகப்பில் வழங்கப்பட்டுள்ள கியாவின் பாரம்பரிய டைகர் நோஸ் கிரில் மத்தியில் வழங்கப்பட்டுள்ள கியா நிறுவன லோகோவை தொடர்ந்து எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல் நேர ரன்னிங் விளக்குகள், 3டி முறையில் வழங்கப்பட்டுள்ள டர்ன் இன்டிகேட்டர், ஐஸ் கியூப் தோற்றத்தை வெளிப்படுத்தும் பனி விளக்குளை கொண்டுள்ளது.
8 விதமான நிறங்களுடன 5 விதமான டூயல் டோன் நிறங்களும் வழங்கப்பட உள்ள செல்டாஸில் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள க்ரோம் பட்டை மற்றும் எல்இடி டெயில் விளக்குகள் காரின் கவர்ச்சியை மேலும் அதிகரிக்கின்றது.
செல்டாஸ் என்ஜின் விபரம்
விற்பனைக்கு வரும்போது பிஎஸ்-6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வு நடைமுறைக்கு ஏற்றதாக வரவுள்ள இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கலாம். இதுதவிர, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும்.
இந்த காரில் சாதாரணமாக மூன்று விதமான டிரைவ் மோடுகள் இடம்பிடித்திருக்கும். அவை நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் ஆகும். அடுத்தப்படியாக , டெர்ரெயின் வசதிகளுக்கு என வெட், மட் மற்றும் சான்ட் போன்ற மோடுகளும் வழங்கப்பட்டிருக்கும்.
செல்டாஸ் இன்டிரியர்
இந்த காரின் இன்டிரியர் மிகவும் பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் UVO என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி காரைச் சுற்றி காண்பதற்கான கேமரா, வயர்லெஸ் சார்ஜர் , உள்ளிட்ட அம்சங்களுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.
கியா செல்டோஸ் காரில் Tech Line மற்றும் GT Line என இரு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. இதில் டெக் லைன் என்பது பல்வேறு நவீன அம்சங்கள் மற்றும் சொகுசு தன்மை உட்பட குடும்பத்திற்கு ஏற்றதாகவும், GT Line என்பது இளைய தலைமுறையினர் விரும்பும் வகையிலான அம்சங்களை கொண்டிருக்கும்.
விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் வெளியிடப்பட உள்ள நிலையில் கியா மோட்டார்ஸ் நிறுவன டீலர்கள் 160 நகரங்களில் சுமார் 265 டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனோ கேப்டூர் போன்ற மாடல்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ள உள்ள கியா செல்டாஸ் எஸ்யூவி விலை ரூபாய் 12 லட்சம் முதல் ரூபாய் 16 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கலாம்.