இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் FAME ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் ஒகினவா ஐ-ப்ரெயஸ் ஸ்கூட்டருக்கு ரூ.26,000 மானியம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட FAME -I ( Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles in India) கடந்த மார்ச் மாதம் நிறைவுற்ற நிலையில், தற்போது FAME -II திட்டம் நாடு முழுவதும் செயற்படுத்த தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு சக்கர மின்சார வாகனங்களில் ஒகினவா நிறுவன ரிட்ஜ் ப்ளஸ் மற்றும் ஐ-பிரெய்ஸ் ஸ்கூட்டர்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.26,000 மானியம் அறிவித்த மத்திய அரசு
ஒகினவா ஐ-பிரெய்ஸ் ஸ்கூட்டர் ரூ.1,14,920 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற, இந்த மாடலுக்கு ரூ.26,000 மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த ஸ்கூட்டர் விலை குறைக்கப்பட்டு ரூ.88,920 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் தொடங்குகின்றது.
அடுத்து இந்நிறுவனத்தின் ரிட்ஜ் பிளஸ் மாடலுக்கு ரூ.79,290 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் , தற்போது ரூ.17,000 மானியம் வழங்கப்பட்டு ரூ.62,290 எக்ஸ்ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐ- பிரெயஸ் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 2.9kWh பேட்டரி மின் மோட்டார் அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டடர் மணிக்கு 55 முதல் 75 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் வழங்கவல்லதாக இருக்கும். இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி மிக எளிமையாக கழற்றி மாட்டும் வசதியுடன் , இந்த லித்தியம் அயான் பேட்டரி (மற்ற லெட் ஆசிட் பேட்டரியை விட 40 சதவீத எடை குறைவானதாகும்) முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டும் எடுத்துக் கொள்ளும், இதன் முக்கிய அம்சமாக முழுமையான சார்ஜிங் செய்தருந்தால் அதிகபட்சமாக 160 முதல் 180 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான முன்னணி மாவட்டங்களில் ஒகினவா டீலர்கள் அமைந்துள்ளது. குறிப்பாக சென்னை,மதுரை,சேலம், திருச்சி, ஈரோடு, கடலூர், தருமபுரி, விழுப்புரம், தூத்துக்குடி,ஓசூர்,சிவகாசி,தேனி,தென்காசி,நாமக்கல்,திண்டுக்கல் மற்றும் பொள்ளாச்சி போன்ற நகரங்களில் உள்ளது.