இந்தியாவின் முதன்மையான பயணிகள் கார் தயாரிப்பாளரின், ஒரே வர்த்தக ரீதியான டிரக் மாடலான மாருதி சுஸூகி சூப்பர் கேரி வாகனத்தின் டீசல் என்ஜின் விற்பனையை ஏப்ரல் 2020 முதல் நிறுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. இனி, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வெர்ஷனில் மட்டும் கிடைக்க உள்ளது.
சமீபத்தில் மாருதி வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி சிறிய ரக டீசல் என்ஜின் தயாரிப்பினை முற்றுலும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பிஎஸ் 6 பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களை மட்டும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
மாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்
மாருதி சுஸூகி கமெர்ஷியல் பிரிவால் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை இலகுரக டிரக் மாடலில் தற்போது 24 KW குதிறைத்திறன் வெளிப்படுத்தும் 793 சிசி டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 48 KW குதிரைத்திறன் பெற்ற 1200 சிசி சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.
இந்நிலையில் விலையை கட்டுபாட்டுக்குள் வைக்கும் நோக்கத்தில் பிஎஸ் 6 என்ஜின் கொண்ட பெட்ரோல் மாடலை மட்டும் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எனவே 2020 முதல் டீசர் டிரக் மாருதி விற்பனை செய்ய வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இனி, புதிய சூப்பர் கேரி டிரக் பிஎஸ் 6 நடைமுறைக்கு ஏற்ற G12B 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 54 kW குதிரைத்திறன் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கலாம். சுஸூகி தலைவர் ஆர்.சி பார்கவா கூறுகையில், குறைந்த விலை கொண்ட சூப்பர் கேரி டிரக் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் அதிகப்படியான மைலேஜ் வழங்கும் வகையில் விற்பனைக்கு கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளார்.