2009 ஆம் ஆண்டு உலகின் ”மலிவான கார்” என அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ கார் உற்பத்தி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 2020 முதல் நானோ கார் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.
டாடா நானோ கார்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அவர்களின் முயற்சியால், இந்திய குடும்பங்களின் விலை குறைந்த காராக அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ அதிகப்படியான தொழிற்நுட்ப கோளாறுகளை அறிமுகம் முதல் எதிர்கொண்ட நிலையில் போதிய வரவேற்பினை பெறாமல் போனது. இந்தியாவில் அறிமுகமான சமயத்தில் நானோ வெறும் ரூ. 1,12,735 விலையில் உலகின் விலை குறைந்த கார் மாடலாக இருந்தது.
அதன்பிறகு பல்வேறு மாற்றாங்களை பெற்ற டாடா ஜென்எக்ஸ் நானோ கார் தற்போது ரூ. 2.34 லட்சம் முதல் ரூ. 3.41 வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் வரை மொத்தம் 275 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு வெறும் மூன்று கார்கள் மட்டும் விற்கப்பட்டுள்ளன.
புதிய பாரத் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு மற்றும் பிஎஸ் 6 மாசு வெளியேற்றக் கொள்கையினை நானோவில் செயல்படுத்த அதிகபட்டியான செலவு ஆகும் என்பதால் நானோவின் உற்பத்தியையே நிறுத்துகிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
டாடா மோட்டார்ஸ் செய்தி தொடர்பாளர் கூறும் போது, அடுத்த ஆண்டு முதல் நானோ கார் பாதுகாப்பு விதிமுறைகள் எதிர்கொள்ள இருப்பதால் இதன் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்.