உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கடந்த மார்ச் 2018-யில் 7,30,473 அலகுகளை விற்பனை செய்து மாதந்திர விற்பனையில் முதன்முறையாக அதிகபட்சத்தை பதிவு செய்துள்ளதை தவிர நிதி வருடத்தில் 75 லட்சம் அலகுகளை கடந்த மற்றொரு சாதனையை படைத்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்
இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரிய ஹீரோ பைக் நிறுவனம் முதன்முறையாக அதிகபட்ச மாதந்திர விற்பனை எண்ணிக்கையாக 7 லட்சம் வாகனங்களை கடந்த அதாவது 7,30,473 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 20 சதவீத வளர்ச்சி (6,09,951 எண்ணிக்கையில்) பெற்றுள்ளது.
தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் மற்றொரு சாதனையை 2017-2018 ஆம் நிதி ஆண்டில் படைத்துள்ளது, அதாவது 2016-2017யில் இந்நிறுவனம், 6,664,240 எண்ணிக்கையில் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை விற்பனை செய்திருந்த நிலையில் 2018 நிதி வருடத்தில் சுமார் 75,87,130 எண்ணிக்கையில் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை 14 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
அதாவது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் 20 விநாடிக்கு ஒன்று என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்கின்றது. இந்நிறுவனம் தற்போது 8 வது உற்பத்தி தொழிற்சாலையை ஆந்திர மாநிலத்தில் அமைக்க தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆலை பயன்பாட்டிற்கு வரும்போது ஹீரோ உற்பத்தி திறன் ஆண்டிற்கு 1.10 கோடியாக உயரும், தற்போது இந்நிறுவனம் ஆண்டிற்கு 92 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த 7 தொழிற்சாலைகளை கொண்டுள்ளது.
இந்த நிதி வருடத்தில் ஹீரோ பைக் நிறுவனம் நான்கு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அவற்றில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் அட்வென்ச்சர் , எக்ஸ்ட்ரீம் 200, மேஸ்ட்ரோ எட்ஜ் 125, டூயட் 125 ஆகியவை வரவுள்ளது.