வருகின்ற மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள டொயோட்டா யாரிஸ் (Toyota Yaris) செடான் காருக்கு ரூ.50,000 செலுத்தி டொயோட்டா டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டொயோட்டா யாரிஸ்
முதன்முறையாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட யாரிஸ் கார் இந்தியாவில் நடுத்தர ரக செடான் பிரிவில் விற்பனையில் உள்ள ஹோண்டா சிட்டி,ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக நிலை நிறுத்தப்பட உள்ளது. யாரிஸ் கார் பல்வேறு வெளிநாடுகளில் யாரிஸ் அல்லது வயோஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது
கரோல்லா அல்டிஸ் செடானுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட்டுள்ள யாரிஸ் செடான் மிக நேர்த்தியான தோற்ற அமைப்புடன் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாக கொண்டதாக வரவுள்ளது. இந்த காரில் முதற்கட்டமாக 108 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தகப்பட்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும், டீசல் எஞ்சின் அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.
காம்பேக்ட் ரக செக்மெட்டில் பல்வேறு வசதிகளை முதன்முறையாக பெற உள்ள யாரிஸ் செடான் காரில் குறிப்பாக 7 காற்றுப்பைகள் , 4 சக்கரங்களில் டிஸ்க் பிரேக், கூரையில் ஏசி வென்ட், எல்இடி விளக்கு பின்புற பயணிகளுக்கு, ஓட்டுநர் இருக்கையை மாற்றியமைக்கும் வசதி மற்றும் பார்க்கிங் சென்சார் உட்பட ஏபிஎஸ், இபிடி, புராஜெக்டர் ஹெட்லேம்ப் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக வந்துள்ளது.
விற்பனையில் உள்ள போட்டியாளர்களை ஈடுகொடுக்கும் வகையில் உள்நாட்டில், பெரும்பாலான பாகங்கள் உற்பத்தி செய்யப்படுவதனால், டொயோட்டா யாரிஸ் கார் விலை ரூ.8.50 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.13.50 லட்சம் வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.