உலகின் முதல் எலெக்ட்ரிக் க்ரூஸர் பைக் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யூஎம் ரெனிகேட் தோர் பைக் விலை ரூ.4.90 லட்சம், 2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
யூஎம் ரெனிகேட் தோர்
அமெரிக்காவின் யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் பேட்டரியில் இயங்கும் பைக் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தோர் பைக் மிக கம்பீரமான தோற்ற பொலிவினை வெளிப்படுத்துவதுடன் உறுதியான கட்டுமானத்தை கொண்டதாக வந்துள்ளது.
க்ரூஸர் ரக வடிவமைப்பில் அமைந்துள்ள தோர் பைக் மிக நேர்த்தியான க்ரோம் பாகங்களுடன் 30 கிலோவாட் பவர் மற்றும் 70 என்எம் டார்க் வெளிப்படுத்தும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் ரிவர்ஸ் கியரும் இடம்பெற்றுள்ளது.
அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் சுமார் 270 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டிருக்கின்ற தோர் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிலோமீட்டர், 80 சதவீத சார்ஜ் ஆவதற்கு வெறும் 40 நிமிடங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் 120/80-17 டயரில் 280 மிமீ டிஸ்க் பிரேக் , பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பருடன் 150/90-15 டயரில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் இடம்பெற்றுள்ளது.
முழுமையான எல்இடி விளக்குகளை கொண்டு விளங்குகின்ற தோர் பைக்கின் முன்பதிவு ஏப்ரல் 2018 முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் டெலிவரி இந்த ஆண்டின் இறுதி மாதங்களில் தொடங்கப்படலாம்.
யூஎம் ரெனிகேட் தோர் பைக் விலை ரூ.4.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)