இளைய தலைமுறையினரை கவரும் வகையில் மிக நேர்த்தியான வடிவமைப்பை பெற்ற மாடல்களை அறிமுகப்படுத்தி வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அசத்தலான டாடா H5X எஸ்யூவி கான்செப்ட் மாடலை மோட்டார் ரசிகர்கள் விரும்பும் வகையில் மிக நேர்த்தியாக அறிமுகப்படுத்தி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.
டாடா H5X எஸ்யூவி கான்செப்ட்
இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளராக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகுமிக சிறப்பான முறையில் டாடா கார்களை மேம்படுத்தி வருகின்றது.
இந்நிறுவனத்தின் டாடா இம்பேக்ட் டிசைன் 2.0 வடிவ மொழியை கொண்டு லேண்ட் ரோவர் எஸ்யூவி மாடலின் பிளாட்ஃபாரத்தை அடிப்படையில் டாடா ஹெச்5எக்ஸ் எஸ்யூவி உற்பத்தி நிலை மாடல் மிகவும் சவாலான விலையில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
முகப்பில் டாடா நிறுவனத்தின் பாரம்பரிய கிரிலுடன் கூடிய எல்இடி ஹெட்லைட் கொண்டு நேர்த்தியான பம்பர், பனி விளக்கு அறையில் நேர்த்தியான விளக்குகள் 22 அங்குல அலாய் வீல் பெற்று, பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்சு மற்றும் கிளாடிங் கொண்டிருக்கின்றது. பின்புறத்தில் மிக நேர்த்தியான பம்பரை பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில் ஸ்மோக்டு எல்இடி டெயில் விளக்குகள் இடம்பெற்றதாக வந்துள்ளது.
இன்டிரியர் அமைப்பில் ஐரோப்பியா கான்செப்ட் கார்களில் இடம்பெறுவதனை போன்ற குறைந்தபட்ச வளைவுகள், கோடுகளை கொண்ட கன்சோல் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூர்மென்ட் கிளஸ்ட்டரை பெற்றதாக வந்துள்ளது.4 இருக்கைகளை கொண்ட H5X கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உற்பத்தி நிலை மாடல் 5 இருக்கைகளை பெற்றிருக்கலாம்.
ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 140 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்துவதுடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவற்றை கொண்டதாக டாடா ஹெச்5எக்ஸ் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 2WD மற்றும் 4WD ஆகிய டிரைவ் மோட்களில் கிடைக்கப்பெறலாம்.
உற்பத்தி நிலை மாடல் அடுத்த ஆண்டின் மத்தியில் காட்சிக்கு வரலாம் என எதிர்பார்க்கபடுகின்ற நிலையில் அதனை தொடர்ந்து டாடா H5X கான்செப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது.