வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் குழு உடன் பயணிப்பது போன்ற பாதுகாப்பான பயணத்தை வாடிக்கையாளர்களுக்குத் தர முடிவு செய்துள்ளது ஓலா நிறுவனம்.
சவாரி-பகிர்வுத் துறையில் முதன்முறையாக இந்தியாவின் பிரதான சவாரி செயலியான ஓலா தனது வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில் கார்டியன் (Guardian) சேவையினை அறிமுகம் செய்துள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்திற்கு மிகவும் உதவிகாரமான செயலிகளாக ஓலா (ola) மற்றும் உபேர் (Uber) ஆகியவை இருக்கின்றன. இவை மேலும் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பல்வேறு சேவைகளை அறிமுகப் படுத்திய வண்ணம் உள்ளன.
கார்டியன் அமைப்பானது, ரியல்-டைம் மானிட்டரிங் சிஸ்டம் என்று ஓலா தெரிவித்துள்ளது. ஓலா வாடிக்கையாளர்களின் பயணப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது ஓலா நிறுவனத்தின் தேசியப் பாதுகாப்பு திட்டமான Street Safe திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தற்போது பெங்களூரு, மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதியில் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் இந்த வசதி அறிமுகம் ஆகும் என்றும் , இந்த ஆண்டு இறுதிக்குள் மற்ற நகரங்களில் இது விரிவுபடுத்தப்படும் என்றும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சேவையின் படி, பயணத்திட்டங்கள், எதிர்பாராத மற்றும் மிட்வே நிறுத்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சவாரி குறிகாட்டிகளைப் பகுப்பாய்வு செய்து, அவை வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கப்படும்.
பயணம் முழுவதும் கண்காணிக்கப்படுவதால், பயணத்தின் குறிகாட்டிகள் மற்றும் நேரத்தின் அடிப்படையில், ஓலாவின் பாதுகாப்புப் பதிலளிப்பு குழு (SRT) வாடிக்கையாளர்களின் பயணத்தின் முழுப்பகுதியிலும் உடன் பயணிக்கும் உணர்வைத் தரும் என்றும் ஓலா நிறுவன பாதுகாப்பு பதிலளிப்பு குழு துணைதலைவர் அன்கூர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பயணத்தின் அனைத்து அம்சங்களும் கண்காணிக்கப் படுவதால் தெரியாத இடங்களிலோ அல்லது இரவு நேரங்களிலோ பயம் இன்றி ஓலா வாகனங்களில் பெண்கள் பயணிக்க முடியும். ஓலா வாகனத்தை இயக்குபவர் தங்களிடம் பதிவு செய்தவர் தானா என்பதையும் இந்த கார்டியன் சேவை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் பெங்களூருவை மையமாக கொண்டு துவங்கப்பட்ட ஓலா என்ற நிறுவனம் இன்று அபார வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. விரைவில் நியூசிலாந்திலும் அதன் சேவையை விரிவாக்கம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.