கடந்த வருடம் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா கோடியக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் கோடியக் கார் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்கோடா கோடியக் எஸ்யூவி
கடந்த ஆண்டில் நடைபெற்ற பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் எம்க்யூபி பிளாட்ஃபாரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கோடியக் எஸ்யூவி இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
செக் குடியரசு நாட்டின் ஸ்கோடா நிறுவனம் வோல்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படுகின்றது. புதிய கோடியக் எஸ்யூவி மாடலும் வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மாடல் வடிவமைக்கப்பட்ட அதே MQB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும்.
அலாஸ்கா அருகில் உள்ள தீவுகளில் வாழும் கரடிகளுக்கு கோடியக் என்ற பெயர் உள்ளதால் அதே பெயரினை கொண்டு இந்த புதிய எஸ்யூவி காரினை அழைக்கின்றது. கோடியக் எஸ்யூவி மிகுந்த வலிமை மிக்க பாதுகாப்பான காராக இருக்கும் என ஸ்கோடா தெரிவிக்கின்றது.
ஸ்கோடா எட்டி எஸ்யூவி காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள 7 இருக்கைகளை கொண்ட ஸ்கோடா கோடியாக் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாடலாகும்.
டிசைன்
கோடியக் காரின் அளவுகள் 4,697 மிமீ நீளமும், 1,882 மிமீ அகலமும், 1,676 மிமீ உயரமும் , 2,791 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. மேலும் இதன் கிரவுண்ட் கிளியரண்ஸ் 187 மிமீ மற்றும் 300 மிமீ உயரம் வரை உள்ள நீர் மிகுந்துள்ள இடங்களில் பயணிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முப்பரிமான ஸ்கோடா பாரம்பரிய ரேடியேட்டர் கிரில் , அழகான எல்இடி ஹெட்லைட் விளக்குகளுடன் கூடிய பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் மற்றும் எல்இடி பனி விளக்குகள் என அனைத்து விளக்குகளும் எல்இடியை பெற்றுள்ளது. எல்இடி டெயில் விளக்குகள் , 18 அங்குல அலாய் வீல் , நேர்த்தியான பக்கவாட்டு புராஃபைல் கோடுகள் என மிக நேர்த்தியான அமைந்துள்ளது.
இன்டிரியர்
சிறப்பான ஃபீனிஷ் செய்யப்பட்டு சென்ட்ரல் கன்சோலில் ஸ்கோடா கனெக்ட் 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கலாம். மேலும் இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள்கார் பிளே வசதிகளை பெற்றதாக வரக்கூடும்.
2,791 மிமீ வீல்பேஸ் கொண்டிருப்பதனால் 7 இருக்கைகளுக்கும் மிக தாரளமான இடவசதி கொண்டதாக விளங்குகின்றது. மேலும் பின்புறத்தில் உள்ள பூட் இடவசதி 270 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும் , பின்புற மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால் 720 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும் இரண்டாவது வரிசை இருக்கையை மடக்கினால் அதிகபட்சமாக 2,065 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக விரிவடைகின்றது.
எஞ்சின்
சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கின்ற கோடியாக் நமது நாட்டில் ஒற்றை டீசல் எஞ்சின் பெற்றதாக மட்டுமே ஆரம்பத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
2.0 லிட்டர் டீசல் DQ500 எஞ்சின் பொருத்தப்பட்டு 3,500-4,000 rpm வேகத்தில் அதிகபட்சமாக 148 ஹெச்பி ஆற்றல் மற்றும் 1,750-3,000 rpm வேகத்தில் 340 என்எம் வரை அதிகபட்சமாக டார்க்கினை வழங்கும். இதில் ஆற்றலை 4 சக்கரங்களும் எடுத்துச் செல்ல 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெற்றிருக்கலாம்.
ஸ்கோடா கோடியக் மைலேஜ் லிட்டருக்கு 16.25 கிமீ வரை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறப்புகள்
இந்த எஸ்யூவி மாடலில் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன், பாதுகாப்பு சாரந்த அம்சங்களில் மிக முக்கியமாக பிரிமியம் எஸ்யூவி பிரிவில் அதிகபட்சமாக 9 காற்றுப்பைகள் கொண்ட எஸ்யூவி மாடலாக விளங்க உள்ளது. மேலும் எலக்ட்ரிக் பார்க்கிங், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஆல் ரவுன்ட் பார்க்கிங் சென்சார், இஎஸ்பி, டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஆம்பியன் லைட்டிங், எலக்ட்ரிக் சன் ரூஃப் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக இருக்கின்றது.
மேலும் ஐரோப்பா என்சிஏபி கிராஷ் டெஸ்ட் சோதனையில் கோடியக் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற எஸ்யூவி மாடலாகும்.
போட்டியாளர்கள்
இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள பிரசத்தி பெற்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி, வோல்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி, மிட்ஷூபிசி பஜெரோ ஸ்போர்ட் மற்றும் இசுசூ MU-X ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு இடையே கடுமையான சவாலினை கோடியக் ஏற்படுத்த உள்ளது.
விலை
ரூ.34.49 லட்சம் வரையிலான விலையில் ஸ்கோடா கோடியக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.