மேட் இன் இந்தியா பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஜூன் 29ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.
2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்
7வது தலைமுறை 5 சீரிஸ் கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CLAR பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும். சர்வதேச அளவில் கடந்த வருட இறுதியில் வெளிப்படுத்தப்பட்ட மாடல் வரும் ஜூன் 29ந் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 520d மற்றும் 530d என இருவகையான டீசல் ஆப்ஷனுடன் 530i பெட்ரோல் வேரியன்ட் மாடலும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 190 ஹெச்பி ஆற்றலுடன் 400 என்எம் டார்க்கினை வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 520d மாடலில் இடம்பெற்றிருக்கும். 265 ஹெச்பி ஆற்றலுடன் 620 என்எம் டார்க்கினை வழங்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் 520d மாடலில் இடம்பெற்றிருக்கும். இந்த இரு மாடல்களிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
இது தவிர பெட்ரோல் 530i மாடலிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் கியர்பாக்ஸ் பெற்று 252 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வழங்கும் 2.0 லிட்டர் எஞ்சினை பெற்றிருக்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபுள்யூ நிறுவனத்தில் பிரசத்தி பெற்ற மாடல்களான பிஎம்டபிள்யூ 1 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான்டுரிஸ்மோ, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மேலும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 மற்றும் பிஎம்டபிள்யூ X5 போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.