இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2020 ஆம் ஆண்டிற்குள் டிஜிட்டல் முறையிலான விற்பனை 70 சதவீத அளவிற்கு உயரும் என பெய்ன் மற்றும் பேஸ்புக் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஆட்டோ உலகம்
கடந்த 12 மாதங்களில் 87 டீலர்களிடம் 1551 வாடிக்கையாளர்கள் வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான தகவல்களின் அடிப்படையில் ஆய்வறிக்கை பெய்ன் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஆட்டோமொபைல் சந்தையில், தயாரிப்பு, விற்பனை, சேவை உள்ளிட்ட, அனைத்து பிரிவுகளிலும், டிஜிட்டல் எனப்படும் மின்னணு தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் இன்ஜினியரிங், முப்பரிமாண அச்சு, ஸ்மார்ட் சென்சார்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள், வாகன துறையில் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது
தற்போது, 1,800 கோடி டாலராக உள்ள டிஜிட்டல் வர்த்தகம் அடுத்த மூன்றுஆண்டுகளில் அதாவது 2020ல், வாகன விற்பனையில், 70 சதவீதம் பங்களிப்பை அதாவது, 4,000 கோடி டாலர் அளவிலான வர்த்தகம், டிஜிட்டல் தொழிற்நுட்பத்தின் வாயிலாகவே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாகன விற்பனை சந்தையில், தற்பொழுது சமூக வலைதளங்களின் பங்களிப்பு 20 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக உயர்ந்து, 2,300 கோடி டாலர் என்ற அளவை தொடக்கூடும் என இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
மேலும் பெருகி வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு, இணைய இணைப்பு வசதிகள் போன்றவை, டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க துணை புரிந்து வருகின்றன. வாகன துறை வர்த்தகத்தில், ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு 80 சதவீதமாக இருக்கும்.வாகன உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், 10 முதல் 11 சதவீத அளவிற்கு மட்டுமே, டிஜிட்டல் நுட்பம் சார்ந்த வசதிக்கு முதலீடு செய்கின்றன.
விற்பனை சேவை மையங்கள், வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள, டிஜிட்டல் வசதியை அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.வரும், 2020ல், வாகன பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்புக்கு, டிஜிட்டல் வசதியை, 40 சதவீதம் பேர் நாடுவர்; 30 சதவீதத்தினர், வலைதளத்தில் வாகன உதிரிபாகங்கள் வாங்குவர்.
35 வயதுக்கு உட்பட்டவர்களின் பங்களிப்பு டிஜிட்டல் அரங்கில் 49 சதவிகிதமாக இருக்கலாம், 49 சதவிகித வாடிக்கையாளர்கள் வாகனத்தை ஆன்லைனில் தேர்வு செய்த பின்னரே டீலர்களை அனுகுவதாகவும், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.