வருகின்ற மே 18ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள காரக் எஸ்யூவி காரின் டீசர் படங்கள் உள்பட பல்வேறு முக்கிய விபரங்களை ஸ்கோடா ஆட்டோ வெளியிட்டுள்ளது. புதிய எஸ்யூவி காரில் 4 விதமான எஞ்சின் இடம்பெற்றிருக்கும்.
காரக் எஸ்யூவி டீசர்
புதிய கராக் எஸ்யூவி மாடல், சமீபத்தில் வெளியான கோடியாக் எஸ்யூவி ஆடி ஏ3 மற்றும் வோல்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களை அடிப்படையாக கொண்ட வோல்ஸ்வேகன் MQB வடிவமைப்பு தளத்தினை கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் யெட்டி எஸ்யூவி காருக்கு மாற்றாக நிலை நிறுத்தப்பட உள்ளது.
இந்த எஸ்யூவி காரின் நீளம் 4,382 மிமீ, 1,841 மிமீ அகலம் மற்றும் 1,605 மிமீ உயரத்தை பெற்றிருப்பதுடன். முன்பக்க வீல் டிரைவ் கொண்ட மாடலுக்கு 2,638 மிமீ மற்றும் ஆல் வீல் டிரைவ் மாடலுக்கு 2,630 மிமீ கொண்ட வீல்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 588 லிட்டர் கொள்ளளவுகொண்ட பூட்வசதியை அதிகரிக்கும் பொழுது அதிகபட்சமாக 1810 லிட்டர் கொள்ளளவு வரை பெறலாம்.
5 இருக்கை கொண்ட அமைப்பு பெற்ற எஸ்யூவி மாடலாக களமிறங்க உள்ள காரக் எஸ்யூவி மாடலில் பல்வேறு நவீன அம்சங்களை கொண்டதாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக டிரைவர் அசிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட்,ஆட்டோமேடட்டிக் சிட்டி பிரேக்கிங் வசதி, பாதசாரிகள் பாதுகாப்பினை உறுதியும் செய்யும் வசதி என பலவற்றை கொண்டதாக விளங்கும்.
இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் என மொத்தம் 4 விதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். அவை 1.0 லிட்டர் TSI மற்றும் 1.5 லிட்டர் TSI ,டீசல் எஞ்சின் பிரிவில் 1.6 லிட்டர் TDI மற்றும் 2.0 லிட்டர் TDI போன்றவையாகும். இதில் 6வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
வருகின்ற 18ந் தேதி ஸ்கோடா காரக் அறிமுகம் செய்யப்படுவதனை தொடர்ந்து இந்த வருடத்தின் மத்தியில் ஐரோப்பா சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இந்தியா அறிமுகம் குறித்து எந்ந தகவலும் இல்லை.