பெட்ரோலிய பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த பரீசிலனை நடைபெறுவதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வீட்டுக்கே பெட்ரோல் , டீசல்
இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப பெட்ரோல் பங்க்குகளில் வரிசையில் காத்திருப்பதனை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் வீட்டுக்கே வந்து நிரப்பும் வகையிலான திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றது.
மொபைல் வாயிலாக உணவு பண்டங்களை முன்பதிவு செய்வது போல பெட்ரோலிய பொருட்ளை ஆர்டர் செய்து விட்டால், நுகர்வோர்களின் வீடுகளுக்கே பெட்ரோல் டீசல் கொண்டு வந்து வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் தொடக்க விழாவில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசியதாவது:-
தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியானது, அனைத்து துறைகளிலும் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சரியான கொள்கைகளுடன் செயல்படும் சுதந்திர சந்தை, எப்போதும் நுகர்வோர் நலன்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பயன்படுத்தி, விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனையை தொடங்க உள்ளோம்.
பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடா்பாகவும் விவாதித்து வருகிறோம். அதுவும் விரைவில் நடைபெறும் என்றும் அமைச்சா் தொிவித்துள்ளாா்