இந்தியாவின் முதன்மையான பயணிகள் கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுஸூகி நிறுவனம் ரூபாய் 1500 முதல் 8014 ரூபாய் வரை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. பிரிமியம் நெக்ஸா கார்களின் விலையும் உயருகின்றது.
மாருதி சுஸூகி
மாருதியின் ஆல்டோ கார் முதல் எஸ் க்ராஸ் வரையிலாக உள்ள அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தொடக்க நிலை மாடல்களான ஆல்டோ , வேகன் ஆர் போன்றவை ரூபாய் 1500 வரையும் , நெக்ஸா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்ற பலேனோ , எஸ் க்ராஸ் போன்றவை ரூபாய் 8014 வரை உயர்த்தப்படுகின்றது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது.
இதுகுறித்து மாருதி சுசூகி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை, நிர்வாகம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வினை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் நேற்று மேம்படுத்தப்பட்ட வேகன் ஆர் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் , டிஸையர் , ஸ்விஃப்ட் போன்ற மாடல்களும் சந்தைக்கு வரவுள்ளது.
பெரும்பாலான வாகன தயாரிப்பாளர்கள் கடந்த ஜனவரி 1, 2017 முதலே விலை உயர்வினை அறிவித்திருந்தனர் இது குறித்தான தகவல்களை ஆட்டோமொபைல் வணிகம் பிரிவில் படிக்கலாம்.