5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற இந்திய கார்களில் அடுத்ததாக மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலும் இணைந்துள்ளது. முன்பாக டாடாவின் நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் கார்கள் பெற்றிருந்த நிலையில் இப்போது இந்த வரிசையில் எக்ஸ்யூவி300 காரும் இணைந்தள்ளது.
இநிறுவனத்தின் மஹிந்திரா மராஸ்ஸோ முன்பு நான்கு நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருந்த நிலையில் குளோபல் என்சிஏபி சோதனையில் மஹிந்திராவின் முதல் மாடலாக எக்ஸ்யூவி 300 கார் இப்போது 5 ஸ்டார் ரேட்டிங் வென்று அசத்தியுள்ளது. வயது வந்தோர் பாதுகாப்பில் 5 நட்சத்திரமும், குழந்தைகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரமும் பெற்றுள்ளது.
குளோபல் என்சிஏபி அறிக்கையில், விபத்தின் போது XUV300 கட்டமைப்பு மற்றும் தரைதளம் நிலையானதாக உள்ளது. வயது வந்தோருக்கான தலை, கழுத்து மற்றும் முழங்கால் பாதுகாப்பு மிக சிறப்பாகவும், முன் பயணிகளுக்கு மார்புப் பாதுகாப்பும் சிறப்பானதகவே உள்ளதால், அது ஓட்டுநருக்கு ‘போதுமானது’ என்று மதிப்பிடப்பட்டுள்ளது. XUV300 காரின் சோதனை செய்யப்பட்ட மாதிரியின் மிகக் குறைந்த அளவிலான ஊடுருவல் மற்றும் சிறந்த பக்கவாட்டு பாதுகாப்பினை கொண்டிருக்கின்றது, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை பாதுகாப்பு அமைப்பில், குளோபல் என்.சி.ஏ.பி சோதனை செய்த 3 வயது குழந்தை டம்மிக்கு (முன்னோக்கி எதிர்கொள்ளும் குழந்தை இருக்கையில் வைக்கப்பட்டுள்ளது) பாதுகாப்பு தரமானது என்றும், 1.5 வயது குழந்தை டம்மிக்கு பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. ஆனால் isofix அடையாளங்கள் காரணமாக குழந்தை பாதுகாப்பில் முழு ஐந்து நட்சத்திரங்களைப் பெறுவதில் எக்ஸ்யூவி 300 தவறவிட்டதாகவும், நடுத்தர இருக்கை பயணிகளுக்கான மூன்று புள்ளி சீட் பெல்ட் தரமாக குறைவாக உள்ளது என அறிக்கையில் தெரியவந்துள்ளது.
வயதுவந்தோர் பாதுகாப்பில் எக்ஸ்யூவி 300 மாடலுக்கு 17 புள்ளிகளில் 16.42 புள்ளிகளைப் பெற்றுள்ளது. குழந்தை சார்ந்த பாதுகாப்பு அமைப்பில் 49 புள்ளிகளுக்கு 37.44 புள்ளிகளை மட்டுமே எடுத்தது. அதனால் குழந்தை பாதுகாப்பில் 4 நட்சத்திரத்தை மட்டுமே பெற்றுள்ளது.
ஆனால் அல்ட்ரோஸ் கார் வயதுவந்தோர் பாதுகாப்பில் மாடலுக்கு 17 புள்ளிகளில் 16.13 புள்ளிகளைப் பெற்றுள்ளது. குழந்தை சார்ந்த பாதுகாப்பு அமைப்பில் 49 புள்ளிகளுக்கு 29 புள்ளிகளை மட்டுமே எடுத்தது அதனால் குழந்தை பாதுகாப்பு 3 நட்சத்திரத்தை மட்டுமே பெற்றது, இங்கே குறிப்பிடதக்கதாகும்.