இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா எஸ்யூவி மாடலை வெளியிட்டுள்ள நிலையில், 7 இருக்கை பெற்ற அல்கசார் ஃபேஸ்லிஃப்ட், கிரெட்டா EV, கிரெட்டா N-line, மற்றும் வெர்னா N-line என நான்கு மாடல்களை வெளியிட உள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா அமோக வரவேற்பினை பெற்று தொடர்ந்து முன்பதிவு எண்ணிக்கை 25,000 கூடுதலாக பதிவு செய்துள்ள கிரெட்டாவின் காத்திருப்பு காலம் 4-5 மாதங்களாக உயர்ந்துள்ளது.
2024 ஹூண்டாய் அல்கசார்
7 இருக்கை பெற்ற ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி விற்பனையில் உள்ள கிரெட்டா அடிப்படையிலான டிசைன் அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் என்பதனால் தொடர்ந்து பல்வேறு நவீனத்துவமான வசதிகளுடன் லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்களை பெறக்கூடும்.
160 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், கூடுதலாக 115 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 6 வேக மேனுவல் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம். அடுத்தப்படியாக, 159hp மற்றும் 192Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதிலும் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இருக்கும். புதிய அல்கசார் எஸ்யூவி விற்பனைக்கு பண்டிகை காலத்துக்கு முன்பாக வரக்கூடும்.
ஹூண்டாய் கிரெட்டா EV
மிகுந்த எதிர்பார்க்குள்ளாகியுள்ள ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரில் 138 bhp பவர் மற்றும் 255 Nm டார்க் வெளிப்படுத்தும் வகையில் 45 kWh பேட்டரி பேக் பெற்று சிங்கிள் சார்ஜில் உண்மையான ரேஞ்ச் அதிகபட்சமாக 250 -300 கிமீ வெளிப்படுத்தலாம்.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற நெக்ஸான்.இவி, எக்ஸ்யூவி 400, ZS EV, வரவுள்ள மாருதி eVX எலக்ட்ரிக் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா EV விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹூண்டாய் கிரெட்டா N-line
கிரெட்டா காரில் கூடுதல் பெர்ஃபாமென்ஸ் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் கிரெட்டா என்-லைன் வேரியண்ட்டை பண்டிகை காலத்துக்கு முன்பாக கொண்டு வரவுள்ளது.
தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக வரவுள்ள கிரெட்டா என்-லைன் புதிய கிரில், பம்பர் என பல்வேறு மாறுதல்கள் இன்டிரியரில் என்-லைன் கார்களில் வழங்கப்படுகின்ற இருக்கை மற்றும் டேஸ்போர்டு கொண்டிருக்கும். இந்த காரில் 160hp பவரை வெளிப்படுத்தும் 1.5 டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றிருக்கும்.
ஹூண்டாய் வெர்னா N-line
செடான் ரக சந்தையில் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் விரும்புபவரர்களுக்கு ஏற்ற ஹூண்டாய் வெர்னா என்-லைன் மாடலில் 1.5 லிட்டர் tGDi பெட்ரோல் என்ஜின் 160 bhp மற்றும் 253 Nm டார்க்கை வெளிப்படுத்தும். 2024 ஆம் ஆண்டின் பண்டிகை காலத்துக்கு முன்பாக கொண்டு வரவுள்ளது.